நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சர்வதேச ரீதியில் சிங்கப்பூர் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் ஏற்கனவே 300 இற்கும் மேற்பட்ட சிங்கப்பூர் முதலீடுகள் உள்ளதாக குறிப்பிட்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சக்திவளம், நீர், கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் முதலீடுகளை செய்யும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது