கதிராமங்கலம் மக்கள் இன்று 2-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்

286 0

கதிராமங்கலம் மக்கள் இரவிலும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற கோரியும், இது தொடர்பாக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட 10 பேரை விடுதலை செய்யக் கோரியும் பொது மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்கள் ஊரை விட்டு வெளியேறி அங்குள்ள அய்யனார் கோவில் முன் போராட்டம் நடத்துகிறார்கள். நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயி ராஜாராமன் தனது 7 ஏக்கர் நிலத்தை துறந்து ஊரை விட்டு வெளியேறுவதாக கூறினார்.

மேலும் தனியாக உண்ணாவிரதமும் இருந்தார். நேற்று மாலை 5 மணியளவில் பொதுமக்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். ஆனால் ராஜாராமன் மட்டும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

இந்த நிலையில் இரவு 7 மணியளவில் 60 பெண்கள் உள்பட 150-க்கும் அதிகமானோர் அப்பகுதிக்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சில பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து இருந்தனர்.இது குறித்த தகவல் அறிந்த திருவிடைமருதூர் தாசில்தார் கணேஷ்வரன்,வருவாய் ஆய்வாளர் விவேகானந்தம், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் பிரபு ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

கதிராமங்கலம் மக்கள் இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். இதில் அகில இந்திய விவசாய பிரிவு தலைவர் சண்முக சுந்தரம் கலந்து கொண்டார். கதிராமங்கலம் அய்யனார் கோவில் தோப்பில் கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்த போது எடுத்தபடம்.

Leave a comment