சைட்டம் மருத்துவக் கல்லூரியை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மாலபே நெவில் பெர்ணாண்டோ வைத்தியசாலை இன்று அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது.
இதுதொடர்பான நிகழ்வில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
4 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றும், 8 மாடிகளைக் கொண்ட 2 கட்டிடங்களும் இவ்வாறு அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
இந்த வைத்தியசாலை அடுத்த மாதம் முதல் போதனா வைத்தியசாலையாக செயற்படவுள்ளது.
அங்கு இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்படும் என்பதோடு, கட்டணம் செலுத்தி சிகிச்சைப் பெற்றுக்கொள்வதற்கான வசதியும் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை இந்த வைத்தியசாலை மீதான கடனையும் அடைப்பதற்கு, அதன் உரிமையாளராக இருந்த வைத்தியர் நெவில் ஃபெர்ணாண்டோ இணங்கி இருப்பதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வைத்தியசாலை அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படவில்லை என்றும், அது வைத்தியர் நெவில் ஃபெர்ணாண்டோவினால் அரசாங்கத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.