ராமநாதபுரத்தில் மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளிகள் பலி

396 0

201608081145274404_two-died-after-landslide-during-well-work_SECVPFதிருப்புல்லாணி அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளிகள் மீது மண் சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ளது குத்துகால்வலசை கிராமம். இங்குள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கிணறு தோண்டும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

இந்த பணியில் மாரிவலசையை சேர்ந்த சின்னையா (வயது 30), பாலுச்சாமி (40), குப்புசாமி, முருகேசன் ஆகிய 4 பேர் ஈடுபட்டு வந்தனர். இன்று காலையும் 4 பேரும் கிணறு தோண்டும் பணியினை மேற்கொண்டனர்.

இதில் சின்னையா, பாலுச்சாமி ஆகியோர் கிணற்றுக்குள் இறங்கி பள்ளம் தோண்டி கொண்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் 2 தொழிலாளர்களும் சிக்கினர்.

சுமார் 10 அடி ஆழத்தில் மண் மூடியதால் தொழிலாளர்களால் வெளியே வரமுடியவில்லை. அவர்கள் மண்ணுக்குள் மூச்சு திணறி இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் தாசில்தார் மாரி, திருப்புல் லாணி போலீசார் மற்றும் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முனியாண்டி மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மணல் அள்ளும் எந்திரம் கொண்டுவரப்பட்டு பணிகள் நடைபெற்றது.

பல மணி நேர போராட்டத்திற்கு பின் சின்னையா, பாலுச்சாமி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டது.

இறந்த பாலுச்சாமிக்கு முருகம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். சின்னையாவுக்கு ருக்மணி என்ற மனைவி உள்ளார்.