மாயாவதி, என் மனைவியை எதிர்த்து நின்று போட்டியிட்டு வெற்றி பெற தயாரா? என்று தயாசங்கர் சவால் விடுத்துள்ளார்.உத்தரப்பிரதேச மாநில பா.ஜனதா துணைத்தலைவராக இருந்தவர் தயாசங்கர் சிங். இவர் சில நாட்களுக்கு முன் பகுஜன் சாமஜ் கட்சி தலைவர் மாயாவதி பற்றி மிகவும் மோசமான வார்த்தைகளால் தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.
இது உத்தரப்பிரதேசம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தயா சங்கர் சிங்கை பா.ஜனதா உடனடியாக கட்சியை விட்டுநீக்கியது. மேலும் அவரை கண்டித்து பகுஜன் சமாஜ்கட்சியினர் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தினார்கள்.
மாயாவதி கட்சியினர் பதிலுக்கு தயாசங்கர் சிங்கின் தாயார், மனைவி, மகள் பற்றி மோசமாக விமர்சித்தார்கள். மாயாவதியும் தயாசங்கர் மனைவி பற்றி விமர்சித்தார். இதையடுத்து மாயாவதி மீது தயாசங்கர் மனைவி போலீசில் புகார் செய்தார்.
இதற்கிடையே தயாசங்கர் சிங் மீது உ.பி. போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இதனால் அவர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் அது நிராகரிக்கப்பட்டதால் போலீசார் அவரை மாவ் மாவட்டத்தில் வைத்து கைது செய்தனர். நேற்று அவர் ஜாமீனில் விடுதலையானார்.
அதன்பிறகு லக்னோ திரும்பிய தயாசங்கர் சிங் முதல் முறையாக நிருபர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி தனது கட்சிக்காரர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தேர்தல் டிக்கெட் கொடுக்கிறார். இதுபற்றி கோர்ட்டை அணுகி சி.பி.ஐ. விசாரணை நடத்த கோருவேன். பாராளுமன்றத்தில் வாக்குக்கு பணம் வாங்குவது தொடர்பான பிரச்சினையில் பாராளுமன்ற குழு மூலம் பல சமயங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதுபோல் தேர்தல் டிக்கெட்க்கு பணம் வாங்குவது பற்றி ஏன் விசாரணை நடத்தக்கூடாது.
வருகிற தேர்தலில் மாயாவதி என் மனைவி ஸ்வாதி சிங்கை எதிர்த்து நின்று போட்டியிட்டுவெற்றி பெறுவாரா? என்றுஅவருக்கு சவால் விடுக்கிறேன். எந்த தொகுதியில் நின்றாலும் மாயாவதியை எதிர்த்து எனது மனைவி சுயேச்சையாக போட்டியிடுவார். என் மனைவியை மாயாவதியால் தோற்கடிக்க முடியுமா? அவர் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிட தயாரா?
ஆனால் மாயாவதி ஒவ்வொரு தேர்தலிலும் எம்.எல்.சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுத்தான் மாநில சட்டசபைக்கு வருகிறார். அவரால் தேர்தலில் நேரடியாக நிற்க முடியாது.இவ்வாறு தயாசங்கர் சிங் கூறினார்.