தமிழினத்தின் மரபுவழித் திருநாளில் ஒன்றான ஆடிப்பிறப்பினை லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் தமிழுறவுகளோடிணைந்து ஆடிமாதத்தின் முதலாம் நாளான ஞாயிறன்று (16.07.2017) யான் விளையாட்டுத்திடலிலே கொண்டாடியது. அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில், ஆடிப்பிறப்புப்பாடல் கருத்துரைகள் எனத்தொடரந்து ஆடிக்கூழ் கொழுக்கட்டை சிற்றுண்டிகளைப் பகிர்ந்துகொண்டனர்.
கருத்துரைகளை லண்டவ் தமிழாலய நிர்வாகி திரு கந்தசாமி குலேந்திராசா அவர்களும் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு சுப்பிரமணியம் சிவானந்தன் அவர்களும் வழங்கினர். தமிழரது பாரம்பரிய விளையாட்டுகளிலொன்றான கிளித்தட்டு, நிகழ்வுக்கு வருகைதந்திருந்த வளரிளம் தமிழர்களால் ஆர்வத்தோடு விளையாடப்பட்டது. தாயக நினைவுகளோடு உறவுகள் ஒன்றிணைந்த ஒன்றுகூடலாகவும் தமிழினம் திரள்நிலையடைவதற்க்கான களமாகவும் அமைந்தமை சிறப்பாகும்.
இனத்துவ அடையாளங்களைப் பேணவும் எமது பாரம்பரியங்களை அடுத்ததலைமுறை அறியவும் இதுபோன்ற ஒன்றுகூடல்கள் நடைபெறுவது சிறப்பிற்குரியதென்பதைப் பலரது உரையாடல்களில் அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.
மா.பாஸ்கரன்
செயலாளர்
தமிழர் கலாசார விளையாட்டுக்கழகம் – லண்டவ், யேர்மனி
நன்றி.