உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி என ஈரோட்டில் ஈஸ்வரன் பேட்டி அளித்துள்ளார்.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் இன்று நடந்தது. மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொங்குநாடு வளர்ச்சிக்கு உறுதி அளிக்கும் கருத்து ஒற்றுமை உள்ள அரசியல் இயக்கத்துடன் சேர்ந்து வரும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க உள்ளோம்.
பெருகி வரும் மயில்களினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே கோவா மாநிலத்தில் வன விலங்குகளை பிடிக்க மத்திய அரசு சிறப்பு ஒப்புதல் அளித்துள்ளது. அதே போல் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் மயில்களை பிடிக்கவும் அனுமதி வழங்க வேண்டும்.
சத்தியமங்கலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி சசிகுமார் ஆந்திராவில் தன்னை தானே துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார் என்று கூறப்படுகிறது.
ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி அதுவும் அவருக்கு திருமண ஏற்பாடு நடந்த போது தற்கொலை செய்து கொள்வாரா? என்ற சந்தேகம் உள்ளது.
ஒருவர் தற்கொலை செய்வது என்றால் வீட்டின் படுக்கை அறையில் தற்கொலை செய்து கொள்வார். ஆனால் ஐ.பி.எஸ். அதிகாரி சசிக்குமார் தான் வேலை பார்த்த அலுவலகத்தில் உட்கர்ந்த படியே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் பல சந்தேகங்கள் உள்ளது.
இது தொடர்பாக சசிக்குமார் பெற்றோர் தமிழக மற்றும் ஆந்திரா முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். தமிழக அரசு இதில் தலையிட்டு சசிகுமாரின் சாவை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது பற்றி அனைத்து தரப்பு விவசாயிகளையும் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தலைமை நிலைய செயலாளர் சூரியமூர்த்தி, நிர்வாகிகள் கே.கே.சி.பாலு, ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.