பிலிப்பைன்சில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள 160 நீதிபதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சரண் அடையும்படி அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபராக ரோட்ரிகோ டியூடெட்ரே பதவி ஏற்றுள்ளார். இவர் போதை பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.
போதைப் பொருள் கடத்தல்காரர்களை சுட்டுக் கொல்ல பொதுமக்களை அனுமதிப்பதாக சமீபத்தில் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார்.இந்த நிலையில் நாட்டை சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 160 பேரின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டார். அவர்களில் நீதிபதிகள், மேயர்கள், போலீஸ் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் அடங்குவர்.
அவர்கள் தானாக வந்து சரண் அடைய வேண்டும். இல்லாவிடில் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும். என எச்சரித்துள்ளார். மேலும் அவர்களது பாதுகாப்பு அதிகாரிகளையும், துப்பாக்கி அனுமதியையும் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார். அதிபரின் இத்தகைய நடவடிக்கை அங்கு கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.