வெள்ளவத்தையில் மீண்டும் பொலிஸ் பதிவு

2388 0

கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலுள்ள தனியார் தமிழ் நிறுவனங்களை இலக்குவைத்து பொலிஸ் பதிவு நடைமுறையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறான நடைமுறையொன்றை பொலிஸார் அமுல்படுத்தவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் ஒன்றான
வெள்ளவத்தையிலுள்ள தனியார் தமிழ் நிறுவனங்களை இலக்குவைத்து பொலிஸ் பதிவு
நடைமுறையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் மக்கள் தொடர்பு பிரிவினரால் பொலிஸ் பதிவிற்கான
படிவமொன்றும் விநியோகிக்கப்பட்டுவருகின்றது.

வீட்டு உதவியாளர் உட்பட ஏனைய குடியிருப்போர் என்ற தலைப்பிலான குறித்த படிவத்தில்
முழுப்பெயர், வயது, தேசிய அடையாள அட்டை இலக்கம், பிரதான குடியிருப்பாளர் வீட்டில்
தங்குவதற்கான காரணம், பிரதான குடியிருப்பாளருக்குள்ள உறவுமுறை, பிரதான
குடியிருப்பாளர் வீட்டில் தங்கும் கால அளவு போன்ற விபரங்கள் கோரப்பட்டுள்ளன.யுத்தம்
இடம்பெற்ற காலப்பகுதியில் கொழும்பிலுள்ள பல பகுதிகளில் ஆட்களைப் பதிவுசெய்யும் நடைமுறை
முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்த பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டு,
நிறுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகரவின் ஊடக
சந்திப்பில் ஐ.பி.சி தமிழ் செய்தியாளர் இது குறித்து கேள்வி எழுப்பினார்.

அவ்வாறான படிவங்கள் எதுவும் பொலிஸாரால் விநியோகிக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் சுட்டிக்காட்டினார்.

எனினும் கொழும்பிலுள்ள எமது அலுவலகத்திற்கு ஆட்களைப் பதிவுசெய்யும் பொலிஸ் படிவமொன்று
வழங்கப்பட்டமை குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பட்டது.

அவ்வாறான படிவங்கள் வழங்கப்பட்டமை குறித்து ஆராய்ந்து நாளை பதில் அளிப்பதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் ருவன் குணசேகர பதில் அளித்துள்ளார்.

Leave a comment