ஜனாதிபதி தேர்தலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின்,எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகத்தில் வாக்களித்தனர்.
ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநில சட்டசபையில் தனி வாக்குசாவடி உருவாக்கப்பட்டிருந்தது.தமிழக எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பதற்காக சென்னை கோட்டையில் ஓட்டுச் சாவடி அமைக்கப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஓட்டுச்சாவடி அறைக்கு வெளியில் எப்படி வாக்களிப்பது என்ற விபரம் நோட்டிசாக ஒட்டப்பட்டிருந்தது.
காலை 10 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் நபராக சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.அவரைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால், எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கேரளா மாநில எம்.எல்.ஏ. பரக்கல் அப்துல்லா வாக்களித்தனர். பிறகு அ.தி.மு.க., தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வந்து ஓட்டு போட்டு சென்றனர்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் வாக்களிப்பதற்காக ஏற்கனவே தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றிருந்தார். காலை 8.17 மணிக்கெல்லாம் அவர் சென்னை தலைமை செயலகக்துக்கு வந்து விட்டார். 6-வது நபராக வந்து அவர் தன் வாக்கை பதிவு செய்தார்.ஒட்டுச்சாவடி அறைக்குள் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஏஜெண்டாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பணியாற்றினார். அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் செம்மலை, தி.மு.க. சார்பில் கொறடா சக்கரபாணி பணியாற்றினார்கள்.
வாக்களித்து விட்டு வந்ததும் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
நான் யாருக்கு வாக்களித்தேன் என்பதை வெளியில் சொல்லக்கூடாது. தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் போது யார் வெற்றி பெறுவார் என்பது உங்களுக்கு தெரிந்து விடும். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். அதன்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து வருகிறார்கள்.இவ்வாறு முதல்-அமைச் சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் அதிக ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகிறார்கள். சாதாரண மக்களை விட அவர்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது.இதே வேகத்தில் எம்.எல். ஏ.க்கள் வாக்களித்தால் பிற்பகல் 3 மணிக்கெல்லாம் ஓட்டுப்பதிவு முடிந்து விடும்.இவ்வாறு அவர் கூறினார்
ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
ஜனாதிபதி தேர்தலில் திட்டமிட்டப்படி எங்கள் அணியினர் வாக்களித்து வருகிறார்கள். பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மகத்தான வெற்றியை பெறுவார்.இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எங்கள் கட்சி ஆதரிக்கும் வேட்பாளர் மீராகுமார் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.எங்கள் தலைவர் கலைஞர் வாக்களிக்க வருவது பற்றி கேட்கிறீர்கள். வாக்களிப்பதற்கு மாலை 5 மணி வரை கால அவகாசம் உள்ளது. எனவே அதுவரை பொறுத்திருந்து பாருங்கள்.இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலையிலேயே தலைமை செயலகத்துக்கு வந்திருந்தனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலை 9 மணிக்கெல்லாம் கோட்டைக்கு வந்திருந்தனர்.10 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியதும் எம்.எல்.ஏ.க் கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். முதல் 30 நிமிடத்தில் அதாவது 10.30 மணிக்குள் 50 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்திருந்தனர்.