அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் சிலர், அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தயாராகி வருவதாக வெளியான தகவலையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்தச் சந்திப்பின்போது, அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தயாராகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை, அரசாங்கத்துக்குள்ளே வைத்துகொள்ளும் முயற்சியில், ஈடுபடுமாறும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
அதனடிப்படையில், அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ள உறுப்பினர்கள் குழுவுடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கடந்த வாரம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எடுத்துள்ள முயற்சி தொடரும் என்றும், அரசாங்கத்தைக் கவிழ்க்க விடாது, தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.