வெனிசுலாவில் அதிபருக்கு எதிரான வாக்கெடுப்பின் போது மர்ம நபர்கள் தீடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலக வலியுறுத்துகின்றனர். இப்போராட்டம் கடந்த ஏப்ரல் முதல் நடைபெற்று வருகிறது.அதில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் மற்றும் போலீஸ்- ராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இருந்தும் போராட்டம் ஓயவில்லை. பலவிதங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் அதிபருக்கு எதிராக நேற்று எதிர்கட்சிகள் பொதுவான வாக்கெடுப்பு நடத்தினார்கள். அதற்காக தலைநகர் கராகசில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாக்குபோட நீண்ட ‘கியூ’ வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சிலர் கும்பலாக வந்தனர்.
பின்னர் திடீரென அவர்கள் ஓட்டு போட வரிசையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் கூட்டத்தினர் சிதறி ஓடினர். உயிர் பிழைக்க அருகேயுள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் பதுங்கி கொண்டனர்.
இதற்கிடையே, மர்ம நபர்கள் சுட்டதில் 4 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிசிச்சை பலனின்றி ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.அவரதுபெயர் ஸியோ மரா சோலிடெட் ஸ்காட் (61). இவர் நர்சு ஆக பணி புரிந்தார். மற்ற 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தாக்குதலை அதிபர் மதுரோவின் ராணுவம் நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.