போலி கடனட்டைகளைப் பயன்படுத்தி, இந்திய ரூபாய் பெறுமதியில் சுமார் 1,000 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், இலங்கையர் உட்பட மூவரை, இந்தியாவின் மத்திய குற்றப்பிரிவு பொலிஸ் கைதுசெய்துள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திவ்யன் (வயது 30), இந்தியா கனக நகரைச் சேர்ந்த நவாஸ் செரீப் (வயது 22) மற்றும் பெங்களூரு வடமேற்கைச் சேர்ந்த நதீம் செரீப் (வயது 30) ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு வங்கிகளின் கடனட்டைகள் போன்ற 144 போலிக் கடனட்டைகள், அவற்றைத் தயாரிப்பதற்காக வைத்திருந்த 36 இயந்திரங்கள், 270 போலி சுவீப் அட்டைகள், காட் ரீடர்ஸ், அச்சு இயந்திரங்கள் என்பவற்றையும் பொலிஸார் இவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.
இந்திய ரூபாய் பெறுமதியில் சுமார் 1,000 மில்லியன் ரூபாய்க்கு இவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்படி மூவரும், வெவ்வேறு நாடுகளிலுள்ள வங்கிக் கடனட்டை வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து, அவர்களின் கடனட்டைகளின் இரகசிய இலக்கத்தைப் பயன்படுத்தியே, போலிக் கடனட்டைகளைத் தயாரித்து, அவற்றின் ஊடாக, பொருட்களைக் கொள்வனவு செய்து, இம்மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இணையத்தில் பொருட்களைப் பதிவு செய்தே, இவ்வாறான மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இது பாரியளவிலான இணைய மோசடியாக இருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகின்றது.
இணையக் கொள்வனவுக்கூடாக, வெளிநாடுகளிலுள்ள வாடிக்கையாளர்களின் இரகசிய இலக்கங்களைத் தெரிந்துகொண்ட அவர்கள், இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது என்று, இந்தியாவின் மத்திய குற்றப்பிரிவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு வங்கிகளில் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்தால், உள்நாட்டுப் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்படாது என்ற நோக்கத்தில், மேற்படி மூவரும் அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஏனைய நாடுகளிலுள்ள வாடிக்கையாளர்களை இலக்குவைத்து, இவ்வாறான மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இம்மோசடியின் பிரதான சூத்திரதாரியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திவ்யன் என்பர், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் சென்னைக்கு சட்டவிரோதமாக வந்தவரென்றும், சென்னை பொலிஸாரால் தேடப்பட்டு வருபவரென்றும் வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.