இந்தியாவில் ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது. பா.ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் சார்பில் மீராகுமார் போட்டியிடுகின்றனர்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க் கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. டெல்லியில் பாராளுமன்ற வளாகம், தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள சட்டசபை வளாகம், இதேபோல் பிற மாநிலங்களில் உள்ள சட்டசபை வளாகங்கள் என மொத்தம் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவை தேர்தல் கமிஷனின் 33 பார்வையாளர்கள் மேற்பார்வையிடுகிறார்கள். மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் வாக்குரிமை பெற்றுள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் பாராளுமன்றத்துக்கு இன்று வருவதாலும், மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதாலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எம்.பி.க்களுக்கான வாக்குச்சீட்டுகள் பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுச்சீட்டுகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
வாக்குச்சாவடியில் வாக்காளர்களான எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என கூறுகிற குறிப்புகளை கொண்ட சிறப்பு ‘போஸ்டர்’ களையும் தேர்தல் கமிஷன் இந்த தேர்தலில் முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது.
பாராளுமன்ற வளாக வாக்குச்சாவடியில் வைக்கப்படுகிற ஓட்டுப்பெட்டிகள், வாக்குப்பதிவு முடிந்தவுடன் ‘சீல்’ வைக்கப்பட்டு அங்குள்ள அறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் வைக்கப்படும். இதேபோல், மாநில சட்டசபைகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படுகிற வாக்குப்பெட்டிகளும் ஓட்டுப்பதிவு முடிந்து ‘சீல்’ வைத்து டெல்லிக்கு அனுப்பிவைக்கப்படும்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வரும் 20 ஆம் தேதி வெளியாகும். வெற்றி பெறும் வேட்பாளர் புதிய ஜனாதிபதியாக 25-ஆம் தேதி பதவி ஏற்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.