முல்லைத்தீவில் இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலை முள்ளியவளை ஆலடி சந்தியிலிருந்து கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இடம்பெற்றது.
குறித்த கவனயீர்ப்புப் பேரணி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள்,கூழாமுறிப்பில் இருந்து வாரிவண்ணான் காடு வரைக்குமான பகுதியானது முள்ளியவளைக்கும் – ஒட்டுசுட்டான் வீதிக்கும், நெடுங்கேணி – புளியங்குளம் வீதிக்கும் இடைப்பட்ட அடர்வனத்தைக் குறிக்கும் பகுதியாகும்.
இக் காட்டில் 177 ஏக்கரை அழித்து முஸ்லிம் மக்களைக் கொண்ட குடியேற்றம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே இனப்பரம்பலை சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் இத்திட்டத்தை எதிர்க்கவேண்டிது கட்டாயமானதொன்றாகும்.போருக்குப் பின்னரான நல்லிணக்க முயற்சிகளைக் கட்டியெழுப்பும் விதமாக உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட, இனப் பரம்பலை சிதைக்கும் விதமாகக் குடியேற்றங்களை உருவாக்கக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த செயற்ப்பாட்டை முற்றாக எதிர்க்கிறோம்.- என்றும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், –வனம் அழித்தால் இனம் அழியும். வனத்தை அழிப்பதும் எங்கள் வாழ்வுரிமையை அழிப்பதும் ஒன்றே. நிலத்தொடர்ச்சியை சிதைத்து எம் இனத்தொடர்ச்சியை அறுக்காதே. இது இனவாதம் அல்ல வன வதைக்கு எதிரான வாதம். எம் அடையாளம் இழந்து அகதியாக வாழமாட்டோம். எங்கள் வனத்தாய் மடியில் தீ வைக்காதே.
இயற்கை சமநிலையை குழப்பி எம் வாழ்வை சிதைக்காதே. எங்கள் நிலம் எங்கள் வனம் காப்பது எமது கடமை.–
என்றும் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி’ என்ற அமைப்பினால் இன்று காலை குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.முல்லைத்தீவு முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த பேரணி காடழிப்பு நிகழ்த்தப்படவிருக்கும் கூழாமுறிப்பு பிரதேசம் வரை சென்று நிறைவடைந்தது.
குறித்த பேரணியில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களிலிருந்து சமூகவலைதலங்களினூடாக ஒன்றிணைந்த இளைஞர் குழு கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய ஆர்ப்பாட்டத்தில், ஆலடிச்சந்தியில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் தரம் நடைபவனியாக சென்று இளைஞர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வடமாகாண சபை உறுப்பினர்களான து.இரவிகரன், ஆ.புவனேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பல்வேறு அமைப்புக்களை சார்ந்த இளைஞர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.