செனகல் நாட்டில் கால்பந்து போட்டியின் போது, ரசிகர்களின் கலவரத்தால் மைதானத்தின் சுவர் இடிந்து விழுந்து 8 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் நாட்டின் டாக்கர் நகரில் கால்பந்து மைதானம் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரண்டு உள்ளூர் அணிகள் விளையாடிக் கொண்டிருந்தன. இந்த போட்டியை காண மைதானம் முழுவதும் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
போட்டி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நேரத்தில், ஒரு அணியை சேர்ந்த ரசிகர்கள், மற்றொரு அணியை சேர்ந்த ரசிகர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து அவர்களும் பதிலுக்கு தாக்கத் தொடங்கினர். இதனால் மைதானத்தில் திடீரென கலவரம் ஏற்பட்டது.
தகவலறிந்து, மைதானத்துக்கு விரைந்து வந்த போலீசார், ரசிகர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளால் சுட தொடங்கினர்.
இதனால் ரசிகர்கள் அலறியடித்து ஓடினர். இதற்கிடையே, மைதானத்தின் காம்பவுண்ட் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளில் சிக்கி 8 ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து ரசிகர்கள் கூறுகையில், மைதானத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே கலவரம் ஏற்பட்டதற்கு காரணம் என குற்றம் சாட்டினர். செனகல் நகரில் வரும் 30 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது ஆளும் கட்சியை கவலையடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.