வக்கீல்களை கொல்ல முயன்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டு வக்கீல் காசிநாதபாரதி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பஞ்சநத்திக்குளம் நடுகிராமம் எனது சொந்த ஊராகும். எங்கள் ஊருக்கு அருகேயுள்ள வாய்மேடு கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 35-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இவர் அப்பகுதியில் பிரபல ரவுடியாக இருந்து வருகிறார். இவர், அரசியல் கட்சியில் நிர்வாகியாக உள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு குமார் என்ற ரகுபதியை, பழனியப்பன் கொடூரமாக கொலை செய்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பழனியப்பனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் கொலை செய்யப்பட்ட குமாரின் குடும்பத்தினர், சட்ட உதவி கேட்டு என்னிடமும், வக்கீல்கள் முருகபாரதி, டி.பி.செந்தில் குமார் (இவர் தற்போது உயிருடன் இல்லை) ஆகியோரிடம் வந்தனர்.
வக்கீலாகியாக நாங்கள், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அவர்களுக்கு சட்ட ரீதியாக சில உதவிகளை செய்தோம். இந்த கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதனால், பழனியப்பன் எங்கள் மீது கோபம் கொண்டார். வக்கீல் செந்தில் குமாரையும், அவரது பெற்றோரையும் மிரட்டினார். ஐகோர்ட்டுக்கு வெளியில் வக்கீல் செந்தில்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
பழனியப்பன் மீது எந்த போலீஸ் அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. நேர்மையான அதிகாரிகள், அவர் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டால், பல கசப்பான சம்பவங்களை அவர்கள் எதிர் கொள்ளவேண்டும். நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டரின் வாகனத்தை பழனியப்பனும், அவரது ஆட்களும் தீ வைத்து கொளுத்தினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
தற்போது கைத்தறித்துறை அமைச்சராக இருக்கும் ஓ.எஸ்.மணியன், கடந்த 2010-ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது, பழனியப்பனும் அவரது ஆட்களும், அவரை கொடூர ஆயுதங்களால் தாக்கி, அவரது வேட்டியை உருவி விட்டனர். அவரது வாகனத்தை அடித்து நொறுக்கினர். இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், பழனியப்பனையும், அவரது ஆட்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வில்லை.
இந்த நிலையில், நானும், வக்கீல் செந்தில்குமாரும் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி சொந்த ஊருக்கு சென்று இருந்தோம். இதை தெரிந்துக் கொண்ட பழனியப்பன், அவரது ஆட்களை அனுப்பி எங்களை கொலை செய்ய முயன்றார்.
ஆனால், அவரது ஆட்கள் ஆயுதங்களுடன் வருவதை பார்த்த நாங்கள் அங்கிருந்து தப்பிச் சென்றோம். எங்களை தேடி வந்தவர்கள், எங்களுடன் இருந்த எங்களது கார் டிரைவர் கண்ணன், ரமேஷ்குமார், மாணிக்கம் ஆகியோரை கொடூரமாக தாக்கினார்கள். காரையும் அடித்து நொறுக்கிச் சென்றனர்.
இதுகுறித்து பழனியப்பன் மற்றும் அவரது ஆட்கள் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில், வாய்மேடு போலீசார் கொலை முயற்சி வழக்கை பதிவு செய்தனர். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இதையடுத்து நாங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த கொலை முயற்சி வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றியது. மேலும், உள்ளூர் கோர்ட்டில் விசாரித்தால் அது சரியாக இருக்காது என்று கூறி, கடலூர் மாவட்டத்தில் உள்ள செசன்சு கோர்ட்டுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரி கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடலூர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். அதில், போலீஸ் தரப்பு சாட்சியாக, பழனியப்பனின் கூட்டாளிகள் மற்றும் உறவினர்களை போட்டுள்ளனர்.
போலீஸ் தரப்பு 43-வது சாட்சியான குமாரவேல், குமார் என்ற ரகுபதியை கொலை செய்த வழக்கில், பழனியப்பனுடன் கைது செய்யப்பட்டவர். அமைச்சர் ஓ.எஸ்.மணியனை தாக்கிய வழக்கிலும், இவர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் எப்படி பழனியப்பனுக்கு எதிராக கோர்ட்டில் சாட்சியம் சொல்லுவார்?
இதேபோலத்தான் பழனியப்பனின் உறவினர்கள் பலரை, போலீசார் சாட்சியாக போட்டுள்ளனர். எங்களை தாக்கியது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. திருவாரூர் மாவட்ட இன்ஸ்பெக்டர் நேர்மையாக விசாரிக்க வில்லை. எனவே, கடலூர் கோர்ட்டில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும். எங்களை தாக்கிய வழக்கை மறு விசாரணை செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதி ரமேஷ் விசாரித்தார். கடலூர் கோர்ட்டில் விசாரிக்கப்படும் இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.