1977 ஆம் இராஜவரோதயம் சம்பந்தன் தமிழ் அரசியல் பாதையில் தடம்பதித்தார். 1977 இல் இருந்து 2017 வரையான அவரது அரசியல் பயணம் நீண்டுகொண்டே செல்கின்றது.
அவரது தொடர் பயணத்தில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான எந்த ஓர் ஆக்க பூர்வமான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என்பதே நிதர்சனம். தமிழ் மக்களினுடைய பேச்சு வழக்கில் சொல்லப்போனால் “சம்பந்தர் எமக்கு சம்மந்தம் இல்லை!” என்பதே தமிழ் மக்களினுடைய ஆணித்தரமான கருத்தாக உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து எதுவும் செய்யவில்லையே என நீலிக்கண்ணீர் வடித்த சம்பந்தன். இன்று எதிர்கட்சி தலைவராக நாடாளுமன்றில் நாட்டமை காட்ட வேண்டியவர் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிபோல் சாமரம் வீசுகிறார்.
தேர்தல் காலங்களில் தேசியம் பேசும் சம்பந்தன். பின்னர் பேசா மடந்தையாய் பேந்த பேந்த விழிப்பார். தமிழீழ விடுதலைப் புலிகளை தனது அரசியல் வாழ்க்கைக்கு சரியாக பயன்படுத்தி கொண்ட சாமத்தியன் சம்பந்தன் .
லண்டன் நாடாளுமன்ற கட்டிடத்தின் ஒரு தொகுதியில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் காலில் விழுந்த சம்பந்தன் “நான் இனி துரோகம் செய்ய மாட்டேன், சாகும்போது துரோகியாக சாக விரும்பவில்லை” என கெஞ்சி மன்றாடி விடுதலைப்புலிகளின் அரசியல் செயற்பாட்டுக்குள் தன்னை இணைந்துக் கொண்டார்..
உலக ஒழுங்குக்கு அமைவாக விடுதலைப்புலிகள் அரசியல் நீரோட்டத்தில் கலக்க வேண்டிய அவசியத்தால் சிதறிப்போயிருந்த தமிழ் அரசியல் கட்சிகளை விடுதலைப்புலிகள் ஒருங்கிணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி சம்மந்தனுக்கு தலைமைப் பொறுப்பை வழங்கியிருந்தனர்.
விடுதலைப்புலிகளால் உருவாக்கபட்ட கூட்டமைப்பை “புலிகள் கூட்டமைப்பை உருவாக்கவில்லை” என சம்பந்தன் ஊடகங்களுக்கு கூறியிருந்தார். ”சம்பந்தன் சம்பந்தம் இல்லாமல் கதைப்பார் ” என மக்கள் தமக்குள் நகைசுவையாக கூறிக் கொள்வர்.
காணாமல் போனோர் விவகாரம், மீள்குடியேற்ற பிரச்சனைகளின் போது சம்மந்தர் “ விரைவில் தீர்வு” எனகூறி மக்களை அமைதிஅடைய செய்துவிடுவார். பின்னர் அவ்விடயம் பற்றியே மறந்து விடுவார். எனவே சம்பந்தர் எமக்கு சம்பந்தம் இல்லாதவரே.
இம் மாதம் 12 திகதி கிளிநொச்சிக்கு பயணமான சம்பந்தன் , போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து பேசியிருந்தார். அவர்களிடம் “இனி அரசாங்கத்துடன், கடும் போக்கை கடைப்பிடிக்கப் போகின்றேன்” என்றார்.
இதே வேளை , முடிவுகளை பெற்றுத்தர சற்றுப்பொறுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இது அவரது வழமையான கருத்தே. பொறுமை காருங்கள் என கூறுவது அவரது அரசியல் கைங்கரியம்.
சம்பந்தனின் சம்பந்தத்தால் மக்கள் எப்போதும் இலகு காத்த கிளிகளே!