மன்/பற்றிமா மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா – 2017

389 0

மன்னார் பேசாலை பற்றிமா மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவானது பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ஜே.ஸ்டானிஸ்லாஸ் தலமையில் 13.07.2017 வியாழக்கிழமை நண்பகல் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் அழைப்பின் பெயரில் வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் விசேட விருந்தினராக மண்ணின் மைந்தனும் கனடாவில் தனது பணியினை ஆற்றிவருபவருமான அருட்தந்தை யூட் குலாஸ் மற்றும் வடமாகாண கல்வி அபிவிருத்திக் குழுவின் திட்டமிடல் பணிப்பாளர் ஞானசுந்தரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக நானாட்டான் மக்கள் வங்கி கிளையின் முகாமையாளர் கமல்ராஜ் அவர்களும் கலந்துகொண்டதோடு, பேசாலை உதவிப்பங்குத்தந்தை, முருகன் கோவில் குருக்கள், கல்வித்திணைக்களத்தின் அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க அப்பாடசாலையின் செயற்ப்பாடுகள் மற்றும் தேவைகளை வெளிக்கொணரவும் வடமாகாண கல்வி அமைச்சின் ஊடக அபிவிருத்தி திட்டங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கோடும் அமைச்சர் அவர்களினால் கல்வி அமைச்சின் செயலாளர் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விருந்தினர்கள், பேசாலை நகரப்பகுதியிலிருந்து பாடசாலை சமூகம் மற்றும் பெற்றோர்களால் இன்னிசை வாத்தியங்கள் முழங்க மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு பாடசாலை மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டதோடு, கடந்த வருடம் கல்வி மற்றும் இணைப்படவிதான செயற்ப்பாடுகளில் தமது திறமையினை வெளிக்காட்டிய மாணவர்களும் உருவாக்கிய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர், இவ்வாறான பாராட்டு விழாக்கள் வெற்றிபெற்ற மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் எனவும் ஏனைய மாணவர்களுக்கும் தாங்களும் அவர்களைப்போல் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் உருவாகுமெனவும் அவ்வாறான ஒரு பொறி மனதிற்குள் உருவாகும்போதுதான் அவர்களால் சாதிக்க முடியுமெனவும் சுட்டிக்காட்டியதுடன், எதிர்காலத்தில் தாம் எவ்வாறு இருக்கப்போகின்றோம் என்பதுபற்றி மாணவர்கள் கனவு காணவேண்டுமெனவும், “கனவு என்பது தூங்கிக்கொண்டிருக்கும் போது காண்பது அல்ல தூங்கவிடாமல் செய்வதே கனவு” எனும் ஐயா அப்துல்கலாம் அவர்களின் வரிகளை கொடிட்டுக்காட்டினார்.

Leave a comment