கிளிநொச்சியில் தடைகளை மீறி வயல் நிலங்களில் ஆழ் துளை கிணறுகள்

279 0

வயல் நிலங்களில் ஆழ் துளைக் கிணறுகளை அமைக்க வேண்டாம் என்ற அதிகாரிகளின் உத்தரவுகளையும் மீறி பூநகரி குடமுருட்டிக் குளத்தின் கீழான வயல் நிலங்களில்  11.07.2017 மூன்று ஆழ் துளைக் கிணறுகளை விவசாயிகள் அமைத்துள்ளனர்.

குடமுருட்டிக் குளத்தில் இருந்து சிறுபோக நெற் செய்கைக்கான நீர்ப்பாசனம் மேற்கொள்ள முடியாத நிலையில் 321 ஏக்கர் நெற் பயிரினைக் காப்பதற்கு விவசாயிகள் ஆழ் துளைக் கிணறுகளை அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளனர்.
ஆழ் துளைக் கிணறுகளை அமைக்க வேண்டாம் என உத்தரவு இடும் அதிகாரிகள் கண்முன்னே அழியும் நெற் பயிரினைக் காப்பதற்கு வழி சொல்வார்களா. நாம் பல தடவைகள் குடமுருட்டிக் குளத்தின் அணைக்கட்டினை உயர்த்துங்கள். குளத்தினை ஆழமாக்குங்கள் எனக் கோரிக்கை விடுத்து இருந்தோம். அவற்றை அதிகாரிகள் செய்யவில்லை. பூநகரிக் குளத்தினை உருவாக்கி இருந்தால் கூட அக்குளத்தில் இருந்து நெற்பயிர்களைக் காத்து இருக்க முடியும். குளத்தில் நீர் இல்லாது போனதன் காரணமாக தற்போது ஆழ் துளைக் கிணறுகளை அமைப்பதைத் தவிர வேறு வழிகள் எமக்கில்லை என குடமுருட்டி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், விவசாயக் குழுக் கூட்டங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் ஆழ் துளைக் கிணறுகளை அமைக்க முடியாது என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Leave a comment