இலங்கை மற்றும் பங்களாதேஷ் இடையே 12 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களாதேஷ் சென்று ள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையில், இன்று (14) நடந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் பின்னர் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இன்று நண்பகல் டாக்கா நகரில் உள்ள பங்களாதேஷ் பிரதமரின் அலுவலகத்திற்குச் விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்களாதேஷ் பிரதமரினால் வரவேற்கப்பட்டார்.
இதன்போது இருநாடுகளுக்கிடையேயும் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளிலுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தல் தொடர்பாக, விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
பின்னர் இரு நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை கட்டியெழுப்புவது சம்பந்தமான உடன்படிக்கையில் வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் பங்களாதேஷ் விவசாயத்துறை அமைச்சரும் ஒப்பமிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
விவசாய ஒத்துழைப்பு சம்பந்தமான உடன்படிக்கையில் விவசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார மற்றும் பங்களாதேஷ் விவசாயத்துறை அமைச்சர் ஆகியோர் ஒப்பமிட்டுள்ளதுடன், தகவல் தொழில்நுட்பம் சம்பந்தமான உடன்படிக்கையில் பிரதியமைச்சர் லசந்த அழகியவன்னவும் பங்களாதேஷின் தகவல் தொழில்நுட்ப அமைச்சரும் ஒப்பமிட்டுள்ளனர்.
இதுதவிர வானொலி மற்றும் தொலைக்காட்சி அபிவிருத்தி, கப்பற் துறை ஒத்துழைப்பு, வௌிவிவகார சேவை அதிகாரிகளுக்கு பயிற்சியளித்தல் மற்றும் வெளிவிவகார சேவை பயிற்சி பிரிவை ஸ்தாபித்தல், இருநாடுகளிடையே இராஜதந்திர மற்றும் அலுவலக கடவுச்சீட்டுகளுக்கு விசா தேவையை இல்லாது செய்தல் உள்ளிட்ட உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.