அரியானாவில் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டதால், பேத்தி உடலை அவளது தாத்தா தோளில் சுமந்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
அரியானா மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்தவர் லட்சுமி(9). இவருக்கு சில தினங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது தாத்தா அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் கேட்ட பணத்தை அவரால் தரமுடியவில்லை. எனவே, அரசு மருத்துவமனைக்கு நேற்று அழைத்துச் சென்றார்.
ஆனால் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். சிறிது நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற காத்திருந்த லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் உடலை வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்பாடு செய்யவில்லை.
இதைதொடர்ந்து, தனியார் ஆம்புலன்சுக்கு பணம் கொடுக்க தாத்தாவிடம் பணம் இல்லை என்பதால், பேத்தியின் உடலை தனது தோளில் தூக்கி சுமந்து சென்றபடி வீட்டை நோக்கி நடையை கட்டினார்.
சிறிது தூரம் சென்றதும், பேத்தி உடலை தாத்தா தூக்கி செல்வதை கண்ட அப்பகுதி மக்களில் சிலர் அங்குள்ள செய்தியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தங்கள் கையிலிருந்த பணத்தை கொண்டு ஆம்புலன்சை வரவழைத்து, லட்சுமி உடலை ஏற்றி அவர்களது கிராமத்துக்கு அனுப்பி வைத்தனர்.சமீப காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.