சீன மனித உரிமை போராளி லியு உடல் தகனம்: மனைவி வீட்டுச் சிறையில் இருந்து விடுதலை

369 0

புற்று நோயால் மரணமடைந்த சீன மனித உரிமை போராளியின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட லியுவின் மனைவி விடுதலை செய்யப்பட்டார்.

சீனாவை சேர்ந்த மனித உரிமை போராளியும், எழுத்தாளரும், இலக்கிய விமர்சகருமான லியு ஜியாபோ (61 வயது), கல்லீரல் புற்றுநோயால் நேற்று முன்தினம் ஷென்யாங் நகரில் மரணம் அடைந்தார்.
சீனாவில் ஜனநாயக சீர்திருத்தங்கள் வேண்டும் என்று குரல் கொடுத்து வந்த ஒரே காரணத்தால், லியு ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட முயற்சித்ததாக குற்றம் சாட்டி 2008-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரைப் புற்றுநோய் தாக்கியபோதும், வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற சீன அரசு அனுமதி அளிக்கவில்லை. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டும், அதைப் பெறக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை. 2010-ம் ஆண்டு ஆஸ்லோவில் நடந்த நோபல் பரிசு அளிப்பு நிகழ்ச்சியின்போது, அவருக்கான நாற்காலியை மட்டுமே வைத்து விழா நடத்தினார்கள்.
இதற்கிடையே, 2010-ம் ஆண்டு முதல் லியு ஜியாபோவின் மனைவி லியு ஜியா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் மாதம் ஒரு முறை அவரது கணவனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
லியு ஜியாபோ மரணத்தை தொடர்ந்து லியு ஜியா-வை சீன அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று பல தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வந்தனர். லியு ஜியாவுடனான வெளியுலக தொடர்புகள் அனைத்தும் கடந்த 48 மணி நேரத்தில் துண்டிக்கப்பட்டு விட்டதாக அவரது வக்கீல் ஜேரெட் கென்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லியு மனைவி ஜியா விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சீன அரசின் தகவல் தொடர்பு அதிகாரியான ஜாங் க்யிங்யாங் கூறுகையில், “லுயு உடல் சனிக்கிழமை காலை தகனம் செய்யப்பட்டது. அப்போது அவரது உறவினர்கள் மற்றும் உள்ளூர் பகுதி மக்கள் உடன் இருந்தனர். லுயு மனைவி ஜியாவும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். என்னுடைய புரிதலின் படி ஜியா தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். சட்டத்தின் படி அவரது உரிமைகள் பாதுகாக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, சீன அரசின் நாளிதழில் வெளியான செய்திதாளில் ’லுயு ஒரு சீன மக்களால் வெறுக்கப்பட்ட குற்றவாளி என்றும் அவருக்கு ஆதரவு அளித்ததன் மூலம் தங்கள் நாட்டின் இறையான்மையில் மற்ற நாடுகள் தலையிடுவதாகவும்’ தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Leave a comment