மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளை வைத்தியசாலைக்கே சென்று கேட்டறிந்து தீர்த்துவைக்கும் நடமாடும் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பணிப்புரையின் கீழ் சுகாதார அமைச்சும் சுகாதார திணைக்களமும் இணைந்து இந்த பணியை முன்னெடுத்துள்ளது.இதன் கீழ் கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளை அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் பிரச்சினைகளை ஆராயும் வகையிலான நடமாடும் சேவை இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மகிபால தலைமையில் நடைபெற்ற இந்த நடுமாடும் சேவையில் பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காஸீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.நாடளாவிய ரீதியில் சுகாதார துறையில் பணியாற்றுவோர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவற்றினை தீர்த்துக்கொள்ளும் வகையில் கொழும்புக்கு செல்லவேண்டிய சூழ்நிலையிருந்துவந்தது.
இதன்காரணமாக வைத்தியசாலைகளில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதன் காரணமாக இந்த நடமாடும் சேவையினை சுகாதார அமைச்சு வைத்தியசாலைகளுக்கு சென்று அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தன் உட்பட சுகாதார திணைக்கள அதிகாரிகள்,வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள்,தாதியர்கள்,சுகாதார சேவைகள் ஊழியர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடமையாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.