தனலட்சுமிகளை மறக்க முடியுமா? புகழேந்தி தங்கராஜ்

533 0

thanaladsumyஇலங்கை ராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த அனுமதிக்கவே மாட்டேன் – என்று மகிந்த ராஜபக்ச சொல்லும்போதெல்லாம் அலரி மாளிகையிலிருந்து ஒரு அசரீரி கேட்பது வழக்கம். ‘அடக்கி வாசி மின்சார நாற்காலியிலிருந்து உன்னைக் காப்பாற்றியதே நாங்கள் தான்’ என்கிற அந்த அசரீரியை இப்போது காணோம். என்றாலும் மைத்திரி – ரணிலின் கைத்தடிகள் அந்த வேலையைத் தொடங்கிவிட்டனர்.

குற்றவாளிகளை நாங்கள் தான் காப்பாற்றினோம் – என்று வெளிப்படையாகப் பிரகடனம் செய்கிற ஒரே நாடு உலகிலேயே இலங்கை மட்டும்தான்! இதற்காக அது வெட்கப்படவேயில்லை. அதிபர் மைத்திரிபாலாவில் தொடங்கி பிரதமர் ரணில் வரை அத்தனைப் பேரும் இதைச் சொல்லிச் சொல்லிப் பெருமைப்படுவதைக் குறித்து சர்வதேசமாவது கவலைப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. யாருக்கும் வெட்கமில்லை.

நியாயமாகப் பார்த்தால் ‘தமிழர்கள் மீதான கொடுமைகளுக்கு நீதி பெற்றுத்தருவதில் சமரசம் செய்துகொள்வதற்கில்லை’ என்கிற தொனியில் ஜெனிவாவில் பேசுகிற ஒவ்வொரு நாடும் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

சென்ற ஆண்டு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய விசாரணையை மேற்கொள்ள இலங்கை சம்மதித்தது. தானும் சேர்ந்தே அதற்கான தீர்மானத்தை ஜெனிவாவில் கொண்டுவந்தது. ‘இலங்கையை எப்படியொரு நெருக்கடிக்கு உள்ளாக்கிவிட்டோம் பார்த்தீர்களா’ என்பதைப்போல் பெருமிதம் பொங்கப் பார்த்தன உலக நாடுகள்.

ஜெனிவாவில் அந்த நாடகம் அரங்கேறியபோது செய்தியாளர்களைச் சந்தித்த சுமந்திரனின் பார்வையில் பீத்தலும் பெருமையும் பொங்கி வழிந்ததை நம்மால் மறக்கவே முடியாது. ‘இன்னா ராஜதந்திரம் பாத்தியா’ என்கிற மாதிரி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள் அவருக்குப் பின் நின்றுகொண்டிருந்த வயக்காட்டு பொம்மைகள். (அவைக் குறிப்புல இருந்து இதையும் நீக்கக்கூடாது தனபாலண்ணே!)

சுமந்திரனின் பழைய வரலாறு வேறு. அப்போது அவர் பின்வாயில் வழியாக இலங்கை நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. இல்லை. இப்போது அப்படியில்லை. வன்னி மண்ணிலிருந்து இலங்கை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எம்.பி.

ஜெனிவாவில் வாக்குறுதி கொடுத்த இரண்டாவது நாளே ‘சர்வதேச விசாரணை என்கிற பேச்சுக்கே இடமில்லை’ என்று பிரகடனம் செய்துவிட்டது இலங்கை. சுமந்திரன் என்ன செய்திருக்க வேண்டும்? ‘அப்புறம் ஏண்டா ஜெனிவாவுல ஒத்துக்கிட்டீங்க’ என்று மைத்திரி அல்லது ரணிலின் சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்க வேண்டாமா? ஜெனிவாவில் பீத்தல் சிரிப்பு சிரித்தவருக்கு பொத்துக்கொண்டு வந்திருக்க வேண்டாமா கோபம்?

பஞ்சாயத்தில் கொடுத்த வாக்குறுதியை மறுநாளே குற்றவாளி மறுதலித்ததைப் பார்த்து நொந்துபோய் நாண்டுகொண்டு செத்த நாட்டாண்மையெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் தமிழினத்தில்! மான ரோஷம் சூடு சொரணை உள்ள அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு அப்படியெல்லாம் உயிர்த்தியாகம் செய்ததில் எனக்கு உடன்பாடில்லை தான்! என்றாலும் ‘அவர்களெல்லாம் உப்பு போட்டுச் சாப்பிட்டவர்கள்’ என்கிற நண்பர் அப்புசாமியின் கருத்தில் எனக்கும் உடன்பாடு.

அயோடின் உப்பு சாப்பிடும் இந்தத் தலைமுறை அரசியல்வாதிகளிடமிருந்து அதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாதுதான். என்றாலும் சுமந்திரனின் ராஜதந்திரம் என்பது பித்தளைப் பாத்திரத்துக்கு அடிக்கப்பட்ட தங்க முலாம் என்பது அம்பலமானவுடன் மானம் மரியாதையோடு எம்.பி. பதவியை சுமந்திரன் தூக்கியெறிந்திருக்க வேண்டும். அதற்கான அறிகுறி கூட தென்படவில்லை.

மானம் மரியாதையோடு எம்.பி. பதவியைத் தூக்கியெறிய சுமந்திரன் என்ன தந்தை செல்வாவா – என்று கேட்கிற நண்பர்கள் இருக்கிறார்கள். அவர் தந்தை செல்வா இல்லை தான்! ஆனால் தெரிந்தோ தெரியாமலோ தொடக்கத்திலிருந்தே மூத்த தலைவர் சம்பந்தரின் நிழலாகவே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டுவிட்டார். அதுதான் பிரச்சினை.

ஜெனிவாவில் கொடுக்கிற வாக்குறுதியை இலங்கை காற்றில் பறக்க விடுகிறபோது சுமந்திரனை ஜெனிவாவுக்கு அனுப்பிவைத்த சம்பந்தர் என்கிற மூத்த தலைவரின் மானம் மரியாதையும் சேர்ந்தே காற்றில் பறக்கிறதே…. அதைக் காப்பாற்றவாவது சுமந்திரன் பதவியைத் தூக்கியெறிந்து சம்பந்தரின் மரியாதையைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா?

ராணுவ வீரர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவே கூடாது – என்கிறது சம்பந்தரிடமும் சுமந்திரனிடமும் நெருங்கிப் பழகிய மகிந்த மிருகம். ராணுவ வீரர்களைக் கூண்டிலேற்றும் திட்டமேயில்லை – என்கிறது மைத்திரி – ரணில் சாம்ராஜ்யம். என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் சம்பந்தனும் சுமந்திரனும்? எப்போது சிங்கக் கொடியைப் பிடித்து ஆட்டலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்களா?

மூத்த தலைவர் சம்பந்தருக்கு சரியாக 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த குமரபுரம் படுகொலைகள் குறித்த முழு விவரங்களும் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அவரது சொந்தத் தொகுதிக்குள்தான் இருக்கிறது குமரபுரம்.

குமரபுரம் பல இன மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்த கிராமம். 1996 பிப்ரவரி 11ம் தேதி மாலையில் குமரபுரத்துக்குள் நுழைந்த ராணுவம் ஒரு சில மணி நேரத்தில் ஒட்டுமொத்த குமரபுரத்தையும் ரத்தக்களறி ஆக்கியது. ஒரு 4 வயதுக் குழந்தை உட்பட அப்பாவித் தமிழர்கள் 26 பேரைக் கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொன்றது. அந்த 24 பேரில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 15 பேர்.

குமரபுரம் சம்பவத்தை நினைக்கும்போதெல்லாம் நம் நெஞ்சை உலுக்குவது சின்னஞ்சிறுமி அருமைத்துரை தனலட்சுமியின் நினைவு தான்! அந்த 16 வயதுக் குழந்தையைக் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திச் சிறுகச் சிறுகச் சிதைத்துக் கொன்றிருந்தன ராணுவ மிருகங்கள். எந்தக் காலத்திலும் அந்தப் பிள்ளையை நாம் மறந்துவிடக்கூடாது.

தனலட்சுமிக்கு என்ன நடந்தது என்பதை விசாரணை நீதிபதியின் முன் கோப்ரல் குமார என்கிற ராணுவ சிப்பாய் விவரித்தபோது நீதிமன்றமே உறைந்து போனது.

‘அந்தச் சிறுமி பல ராணுவ சிப்பாய்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாள். உடல் முழுக்கப் பல்லால் கடித்த காயங்கள் இருந்தன. ஆடைகள் கிழித்தெறியப்பட்டிருந்தன. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவளது பரிதாபகரமான நிலையைப் பார்க்கப் பொறுக்காமல்தான் அவளைச் சுட்டுக்கொன்றேன்’ என்றான் கோப்ரல் குமார.

குமரபுரம் படுகொலை தொடர்பாக 9 ராணுவத்தினர் கைது செய்யப்பட்டனர். கோப்ரல் குமார நடந்தது என்னவென்று நீதிமன்றத்தில் விரிவாக எடுத்துச் சொன்னான். சம்பவத்தைப் பார்த்த சாட்சியங்கள் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்தனர். குற்றம் புரிந்த ராணுவத்தினரை சாட்சிகள் அடையாளம் காட்டினர்.

விசாரணை நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்தபிறகு அந்த வழக்கு தொடர்பான சான்றாதாரங்கள் மற்றும் தடயங்களை கொழும்பு அரசாங்கப் பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைத்தது – மூதூர் நீதவான் நீதிமன்றம். ஒரு தீவிபத்தில் அவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக எரிந்துபோய்விட்டதாக 2005ல் அரசுத் தரப்பில் செய்தி வெளியானது.

மனசாட்சியென்று ஒன்று இருந்தால் சம்பந்தரும் சுமந்திரனும் இப்போதாவது பேசட்டும். இலங்கையின் ஒருமைப்பாட்டைத் தூக்கிப் பிடிக்க வேண்டுமா தீக்கிரையாக்க வேண்டுமா? இலங்கை என்கிற அழகிய தீவு அனுமன் காலத்தைப் போன்று அநியாயத்துக்குத் தீக்கிரையாவதைத் தடுப்பதற்காகவாவது அதன் ஒருமைப்பாட்டைத் தீக்கிரையாக்குவது நல்லதா இல்லையா? இவ்வளவுக்குப் பிறகும் ‘வாழ்வோ சாவோ ஒற்றை இலங்கைக்குள் தான்’ என்று ஒற்றைக்காலில் நிற்கப் போகின்றனவா நிஜமும் நிழலும்!

குமரபுரம் கொடுமை இத்துடன் முடிந்துபோய்விடவில்லை. அண்மையில் குமரபுரம் குற்றவாளிகளான அத்தனை ராணுவப் பொறுக்கிகளையும் இலங்கை நீதிமன்றம் விடுவித்தே விட்டது. ’20 ஆண்டுகளுக்கு முந்தைய சாட்சியங்களை வைத்து எப்படி தண்டனை வழங்க முடியும்’ என்கிற கிறுக்குத்தனமான கேள்வியைக் கேட்டு நீதி நியாயத்தையே கேள்விக்குறி ஆக்கிவிட்டார்கள்.

ராணுவத்தில் மட்டுமில்லாமல் அலரி மாளிகைகள் – நீதிமன்றங்கள் பௌத்த மடங்கள் என்று அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் பொறுக்கிகளே மிகுந்திருக்கிற ஒரு நாட்டில் இதைத்தவிர வேறென்ன நடக்கும்? அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவார்கள் சம்பந்தனும் சுமந்திரனும் கொண்டாடப் படுவார்கள். இதுதான் நடக்கும்!

2009 இனப்படுகொலை தொடர்பான விசாரணையை இலங்கை ஏன் இழுத்தடிக்கிறது என்பது இப்போது புரிகிறதா? குமரபுரத்துக்குக் கிடைத்திருக்கிற ‘அநீதி’ தான் 20 ஆண்டுகள் கழித்து இனப்படுகொலை விஷயத்திலும் கிடைக்கும். அதுவரை இதுகுறித்து தமிழ்மக்கள் கிளர்ந்து எழுந்துவிடாதபடி பார்த்துக் கொள்கிற அடப்பக்காரர்களுக்கு கூடுதல் ஊதியம் கிடைக்கும்.

கிருஷாந்திகள் – தனலட்சுமிகள் முதல் இசைப்பிரியாக்கள் வரை நமது சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் நீதி கிடைத்தாக வேண்டும். முட்டுக்கட்டையாகக் கிடக்கிற நிழல்கள் நிஜங்களையெல்லாம் குப்பைக்கூடையில் போட்டுவிட்டு அந்த இலக்கை நாம் அடைந்தாக வேண்டும்.

தட்டுங்கள் திறக்கப்படும் – என்பது எல்லா சந்தர்ப்பத்துக்கும் பொருந்தாது. தட்டியும் கதவுகள் திறக்கப்படாவிட்டால் உடைத்துத்தான் திறந்தாக வேண்டும். சீரழிக்கப்பட்ட நமது ஆயிரக்கணக்கான சகோதரிகளுக்கு நியாயம் கிடைப்பதுதான் முக்கியமே தவிர கதவு உடைந்துவிடுமே என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது!