நைஜீரியா நாட்டின் மாய்துகுரி நகரில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் போலீசாரை குறி வைத்து நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 19 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பொதுமக்களை குறி வைத்து தொடர்ச்சியாக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நைஜீரியா நாட்டின் மாய்துகுரி நகரில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் 4 பேர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 19 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
வடக்கு நைஜீரியாவின் மாய்துகுரி நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த இடத்தில் ஏராளமான பாதுகாப்பு படை போலீசார் குவிந்திருந்தனர்.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை போலீசார் 12 பேர் கொல்லப்பட்டதாக போர்னோ மாநில போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். மேலும் 23 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் இளம் வயதுடைய பெண் என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்று இளம் வயது பெண்களை கேடயமாக பயன்படுத்தி போகோ ஹாரம் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிரவாதிகளிடம் இருந்து தப்பித்து வந்த சில பெண்கள், போதைப் பொருட்களை வழங்கி இதுபோன்ற தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபடுத்த வைக்கப்படுவதாக தெரிவித்தார்.