கோத்தபாய ராஜபக்ஷவுக்கு மன்னிப்பு கிடையாது – விக்கிரமபாகு!

302 0

சிறிலங்காவில் கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பகிரங்கப் படுகொலைகளுக்கு காரணமான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அதற்காக மன்னிப்பு அளிக்கவே முடியாது என்று நவ சமசமாஜக் கட்சி தெரிவித்துள்ளது. யாரிடமும் தான் மன்னிப்பு கோர முடியாது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய அண்மையில் தெரிவித்திருக்கும் நிலையில், அதனைக் கடிந்துகொண்ட நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன, வெலிக்கடை, ரத்துபஸ்வல, லசந்த விக்ரமதுங்க, எக்னலிகொட போன்ற படுகொலைகளை செய்தது கோட்டாபயவே என்றும் கூறினார்.

கடந்த வாரம் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று அதன் பின்னர் மகாநாயக்க தேரர்களை சந்தித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது, தான் எந்தவொரு குற்றத்தையும் செய்யவில்லை என்றும், ஒருபோதும் மன்னிப்பு கோரப்போவதில்லை எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து கொழும்பில் நவ சமசமாஜக் கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடப்பட்டது.

நாட்டின் கடந்த காலங்களில் திட்டமிடப்பட்ட பல படுகொலைகளை நிகழ்த்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுக்கு மன்னிப்பு கொடுக்கவே முடியாது என்று கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

“தான் யாரிடமும் மன்னிப்பு கோரத் தயாரில்லை, அவசியமும் இல்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருக்கின்றார்.

எனினும் போலிக் குற்றச்சாட்டுக்களை தன் மீது சுமத்தினால் அதனை முகங்கொடுக்கத் தயார் என்றும் கூறியிருக்கின்றார். வெலிக்கடை சிறையில் படுகொலைகளை செய்தது யார்? 2 நாட்களாக சிறையில் கலவரத்தை ஏற்படுத்தி மனிதர்களை கொலை செய்தது யார் என்பதை விசாரணைக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேரடியாக அப்போதிருந்த பாதுகாப்புச் செயலாளரின் பெயரே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது யார்? அப்போதிருந்த பாதுகாப்புச் செயலாளரே இதனை திட்டமிட்டதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்து பிரதீப் எக்னலிகொடவை கடத்தியது யார்? தாஜுடீனை கொலை செய்து அவரது உடற்பாகங்களை அங்கும் இங்கும் எடுத்து மறைத்து வைத்திருந்தமை குறித்து வைத்தியர் ஒருவரை கைது செய்ய அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

இதனை செய்தது யார்? பொன்சேகாவை வீதியில் நாயைப் போல இழுத்துச் சென்று கொலை செய்ய முயற்சித்தது யார்? ரத்துபஸ்வெல கலவரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்தது யார்? ஹவுஸ் ஒவ் பெஷனுக்காக கொண்டுவரப்பட்ட கொள்கலன்களை பரீட்சிக்காமல் வெளியில் கொண்டுவந்தது யார்? அதற்கெதிராக குரல் எழுப்பிய பெண் அதிகாரிகளை பதவியிலிருந்து தூக்கியது யார்? அந்தத் திட்டுக்கும், கோத்தபாயவுக்கு இருக்கும் தொடர்பு என்ன?

எனவே புதிய அரசாங்கத்தை உருவாக்க முயற்சிகளை செய்த நம் யாருக்கும் குறித்த நபர்களின் தனிப்பட்ட விடயங்கள் தேவையில்லை. எனினும் இந்த நாட்டில் இடம்பெற்ற குற்றங்களை அறிந்துகொள்ள தேவையிருக்கிறது. அதனை இழைத்தோருக்கு எவ்வகையிலும் மன்னிப்பு கிடையாது. மன்னிப்பு கோரவும் வேண்டாம்” என்றார்.

Leave a comment