தோட்டவீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கு உறுதிகள்

318 0

பெருந்தோட்ட வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கு உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பெருந்தோட்ட மக்களின் நலன் கருதி வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்காக 2010ஆம் ஆண்டிலிருந்து “நவஜீவன“ என்ற வேலைத்திட்டம் மற்றும் ஹரித்த ரன் என்ற வீடமைப்பு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கோட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக  இந்த தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் முறையே ஆயிரத்து 122 வீடுகளும், ஆயிரத்து 742 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு பெருந்தோட்ட மக்களிடம் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஹரித்த ரன் என்ற வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் 2 ஆயிரம் வீடுகளும், இந்திய நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத்திட்டத்தின் மூலம் ஆயிரத்து 134 வீடுகளும் நிர்மாணிப்பதற்கான அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தோட்ட மக்கள் உயர்வான வாழ்க்கை நிலையுடன் வசதிகள் கூடிய வாழ்க்கையை முன்னெடுப்பதற்காக வீடுகளை நிர்மாணிப்பதற்கும் அவற்றிற்கான முறையான உரிமையை உறுதி செய்வதற்குமாக தலா 7 பேர்ச் காணியை பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2010ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரையில் நவஜீவன வீடமைப்பு வேலைத்திட்டம் மற்றும் ஹறித்த ரன் வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கான முறையான காணி உறுதிகளை வழங்குவதற்காக மலையக புதிய கிராமம் அடிப்படை வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment