ஸ்பெயின் நாட்டின் கனரி தீவுகள் பகுதியில் உள்ள லா பால்மாவில் தீடீர் காட்டுத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒருவர் டாய்லெட் காகிதங்களை எரித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்தனர். நான்கு நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது குறித்து ஸ்பெயின் நாட்டு விவசாயம் மற்றும் சுற்றுச் சூழல் துறை(பொறுப்பு) மந்திரி இசாபெல் கர்சியா கூறுகையில், “கடந்த 4 நாட்களாக தீ பரவிக் கொண்டே வந்து 3,500-4,000 ஹெக்டேர் அளவில் சென்றுள்ளது. இதில் 2 ஆயிரம் ஹெக்டேர் முற்றிலும் அழிந்து சேதமாகியுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த தீ விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காடுகளுக்கு அருகில் உள்ள 3 நகரங்களில் இருந்து 2,500-க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
27 வயது ஜெர்மனி வாலிபர் ஒருவர் போலீசாரிடம் சென்று தான் தான் டாய்லெட் காகிதங்களை பற்ற வைத்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார்.
4 விமானங்கள் மற்றும் 8 ஹெலிகாப்டர்கள் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.