இந்து தத்துவப்படி நாம் வாழ்வோம், பிறரையும் வாழவைப்போம்-அனில் ஆனந்த் தவே

380 0

201608070709264888_Hindu-philosophy-we-live-and-we-will-live-with-others_SECVPFசென்னையில் நடந்து வரும் இந்து ஆன்மிக கண்காட்சியில் ‘துளசி வந்தனம்’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மத்திய மந்திரி அனில் ஆனந்த் தவே பேசும் போது ‘இந்து ஆன்மிக தத்துவப்படி நாம் வாழ்வோம், பிறரையும் வாழவைப்போம்’ என்று கூறினார்.

8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி மீனம்பாக்கம், ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 450 அரங்குகளையும் பார்வையாளர்கள் நேற்று ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

கண்காட்சியின் ஒரு அங்கமாக இயற்கை வழிபாட்டை வலியுறுத்தும் வகையில் 1,008 துளசி செடிகளை போற்றி வணங்கும் ‘துளசி வந்தனம்’, ‘கோ வந்தனம்’ (பசு வந்தனம்) மற்றும் ‘கஜ வந்தனம்’ (யானை போற்றுவது) ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இதற்காக அமைக்கப்பட்ட மேடையில் பெரிய அளவிலான துளசி மாடம் அருகில் கிருஷ்ணர் சிலை அதனை சுற்றி பெரிய யானை பொம்மைகள் மற்றும் பசு கன்றுகளுடன் நிற்பது போன்ற பொம்மைகள் அமைத்திருந்தனர்.

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி அனில் ஆனந்த் தவே நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

‘பசு வந்தனம்’, ‘கஜ வந்தனம்’ மற்றும் ‘துளசி வந்தனம்’ செய்வதன் மூலம் வாழ்க்கைக்கு தேவையான பயனுள்ள பல தகவல்களை அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக மாணவர்கள் நன்கு பயனடைவார்கள். குழந்தைகளுக்கு பசு பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது. பசுவிடம் இருந்து கிடைக்காத சொத்தே இல்லை. குறிப்பாக பால் மட்டுமல்லாது சாணம், கோமியம் போன்றவை நம் உடல் நலனுக்கு அதிக பலனளிக்கிறது. எனவே குடும்பத்தில் ஒருவராகத் தான் பசுவை பார்க்க வேண்டும். ஒரு பசு இருந்தால் 30 ஏக்கர் நிலத்துக்கு தேவையான உரம் கிடைக்கும் என்று பாலேக்கர் என்ற விஞ்ஞானி கூறி உள்ளார். பசு இறந்தாலும் அந்த இடத்தில் தீங்கு விளைவிக்காத உரம் கிடைக்கிறது.

நாம் யானையைவிட மிகப்பெரிய உயிரினத்தை நிலத்தில் பார்க்க முடியாது. இதனுடைய தும்பிக்கையால் புழுதியில் கிடக்கும் ஊசியையும் மற்றும் ஆலமரத்தையும் தூக்கி எடுக்க முடியும். ஆக மனிதனுக்கு உதவும் விலங்காக யானை திகழ்கிறது. நாம் அதற்கு தொந்தரவு செய்யாத வகையில் அது யாரையும் தொந்தரவு செய்வதில்லை.

துளசியில் உள்ள 5 பாகங்களான வேர், தண்டு, இலை, பூ, காய் இவை மகத்துவமானதுடன், மருத்துவ குணம் படைத்தவை. இதனையும் பள்ளி மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்து தர்மம் எல்லோரையும் வாழ வைக்கும் தர்மமாக இருக்கிறது. எனவே இந்து ஆன்மிக தத்துவப்படி நாம் வாழ்வோம், பிறரையும் வாழவைப்போம் என்ற கருத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

மாணவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் இந்த கண்காட்சியை அமைத்த அமைப்பாளர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மட்டும் அல்லாது நாடு முழுவதும் இந்த கண்காட்சியை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இதுகுறித்து கண்காட்சி துணைத்தலைவர் ஆர்.ராஜலட்சுமி கூறியதாவது:-‘கோ வந்தனம்’ என்பது பசுவை போற்றுதலாகும். நாட்டில் வாழும் ஜீவராசிகளை பேணி பாதுகாக்க வேண்டும் என்பதன் குறியீடாகும். அதேபோல் ‘கஜ வந்தனம்’ என்பது யானையைப் போற்றுதலாகும். இது வனம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாத்தல் என்பதன் குறியீடாகும்.

‘துளசி வந்தனம்’ என்பது துளசி செடிக்கு வணக்கம் செலுத்துதல். இது தாவர இனங்களை பேணி பாதுகாக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அவை அனைத்தும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து பார்வையாளர்களையும் சென்று சேர வேண்டும் என்ற அடிப்படையில் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆதம்பாக்கம் டி.ஏ.வி.பள்ளி, மாதா அமிர்தானந்த வித்யாலயா பள்ளி மாணவர்கள், ‘துளசி திருமணம்’ நிகழ்ச்சியை ‘கிருஷ்ணர்’ வேடமிட்டு நடித்து காண்பித்தனர்.நாட்டின் வளமைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் நடத்தப்பட்ட துளசி திருமண நிகழ்ச்சியில் துளசி வழிபாடு, துளசி நடனம், கோ-பூஜையை பள்ளி மாணவிகளே நடத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்களுக்கு பூஜை செய்யப்பட்ட 10 ஆயிரம் துளசி செடிகள் வழங்கப்பட்டன.

பின்னர், காஞ்சி காமகோடி மடம், ராமகிருஷ்ணா மிஷன், பெஜாவர் மடம், கிருஷ்ண பகவானின் மதுரா, ஹரிஹர புரா ராமச்சந்திரபுரா, மாதா அமிர்தானந்தமயி, வாழும் கலை, சுவாமி நாராயண இயக்கம், சின்மயா மிஷன், பதஞ்சலி யோக பீடம், ஈஷா யோகா, சத்ய சாய் நிறுவனம், தர்ம ரஷண சமிதி, சேவா பாரதி, வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் உள்ளிட்ட அனைத்து அரங்குகளையும் மத்திய மந்திரி அனில் ஆனந்த் தவே பார்வையிட்டார். அவருக்கு அரங்குகள் குறித்து ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி விளக்கம் அளித்தார்.

வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்த ஆசிரமம் சார்பில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணப்பநாயனார் – சிவன் சிலையுடன் கூடிய அரங்கை, பள்ளி மாணவர்கள் மிரட்சியுடன் பார்வையிட்டனர். அமைப்பாளர் சி.சிவகுமார், கண்ணப்பநாயனாரின் சிவபக்தி குறித்து பள்ளி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். தொடர்ந்து நேற்று மாலை முரளிதரன் குழுவினரின் கிருஷ்ணா என்ற தலைப்பில் இசை நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கானோர் இதனை பார்வையிட்டனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு ‘பாரத மாதா வந்தனம் – பரம்வீர் வந்தனம்’ என்ற தலைப்பில் இந்து ஆன்மிகத்தில் புதைந்துள்ள 6 நல்ல பண்புகளில் ஒன்றான தேசப்பற்றை மாணவர்களுக்கு ஊட்டும் வகையில் ராணுவ வீரர்களைப் போற்றி வணங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) வரை நடக்கும் கண்காட்சி ஏற்பாடுகளை, 8-வது இந்து ஆன்மிக சேவை கண்காட்சி அமைப்பு குழுவினர் மற்றும் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, துணைத்தலைவர் ஆர்.ராஜலட்சுமி ஆகியோர் செய்து வருகின்றனர்.