ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் ஜி- 20 மாநாட்டில் உலகத் தலைவர்களின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களை போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைத்துக் கொண்டிருந்தனர். இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்து விட்டது. ஆனால் இந்தப் போராட்ட நிகழ்வில் பதிவான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
போராட்டக்காரர்கள் ஹம்பர்க் நகர வீதிகளில் பல குழுக்களாகப் பிரிந்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றுகின்றனர். இந்தக் கலவரத்தினிடையே டோமினோஸ் பீட்சா நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் அந்தக் கலவரத்தில் மாட்டிக் கொள்கிறார்.
முதலில் போராட்டக்காரர்களிடத்திலிருந்து அந்த நபர் தனது வண்டியைக் கடக்கிறார். அவரைக் கண்ட போராட்டக்காரர்கள் இரு கைகளையும் தட்டி உற்சாகப்படுத்துகின்றனர்.
போராட்டக்காரர்களை கடந்து செல்லும் அந்த நபர் போலீஸாரிடம் மாட்டிக் கொள்கிறார். போலீஸ்காரர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி திரும்பிச் செல்ல சொல்கின்றனர். இருப்பினும் அந்த பீட்சா டெலிவரி செய்பவர் தன் வாடிக்கையாளரை ஏமாற்றமடையச் செய்ய விரும்பவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து அப்பகுதியிலிருந்து கடந்து செல்கிறார்.
இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் ஹீரோ என்ற தலைப்பில் ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது.