இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய முதல்வர் பழனிசாமி மோடியை சந்தித்து அழுத்தம் தர வேண்டும்: திருமாவளவன்

1009 0

தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து அழுத்தம் தர வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”மீன்பிடித் தடைக்காலம் முடிந்து தொழிலுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை கடுமையான தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. ஜூன் மாதம் 15ஆம் தேதிக்குப் பிறகு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 10 க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையின் இந்தத் தாக்குதலைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜுலை 14ஆம் தேதி தீக்குளிப்புப் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர். மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை அரசு ‘கடல் தொழில் நீர்வாழ் உயரினவளங்கள் திருத்தச் சட்டம்’ ஒன்றை சில நாட்களுக்கு முன்னால் இயற்றியுள்ளது. இந்தச் சட்டத்தின் பிரிவு 28அ.(1)(அ)ன் படி ‘மோட்டார் மயப்படுத்தப்பட்ட அல்லது இயந்திர மயப்படுத்தப்பட்ட மீன்பிடி வள்ளங்களினால் கட்டி இழுக்கப்படவேண்டிய இரண்டு சிறகுகளுமற்ற அல்லது அவ்வலைகளின் இரண்டு சுயாதீன முனைகளிலும் செங்குத்துக் கம்பங்களைப் பயன்படுத்தும் பக்குரு வலைகள் உட்பட அவ்வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிச் செயற்பாடுகளில் ஆளெவரும் ஈடுபடுதலோ அல்லது வேறு எவரேனும் ஆளை ஈடுபடுத்தல் செயவித்தலோ குற்றம் ஆகும். அந்தக் குற்றத்துக்கு இரண்டு ஆண்டுகளை விஞ்சாத காலப்பகுதியொன்றுக்கான மறியல் ( சிறை ) தண்டனை அல்லது ஐம்பதாயிரம் ரூபாவிற்குக் குறையாத குற்றப்பணம் ( அபராதம்)’ எனத் தண்டனை வரையறுக்கப்பட்டுள்ளது. இலங்கை மீன் வளத்தைக் காப்பதற்காக இந்த சட்டத் திருத்தம் செய்யப்படுவதாக சொல்லப்பட்டாலும் இது தமிழக மீனவர்களைக் குறிவைத்தே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படை.

இலங்கை சிறைகளில் ஏற்கெனவே நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 140 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நாசமாகிக்கொண்டுள்ளன. இந்நிலையில் இலங்கை அரசு இயற்றியுள்ள புதிய சட்டம் தமிழக மீனவர்களை ஒடுக்குவதற்கே பயன்படுத்தப்படும். எனவே, இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கு இந்திய அரசு அழுத்தம் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக மீனவர் பிரச்சினையில் பிரதமருக்குக் கடிதம் எழுதும் சடங்கைச் செய்துவிட்டு மெத்தனமாக இருக்காமல் தமிழக முதல்வர் நேரடியாகச் சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

Leave a comment