கச்சத்தீவை மீட்பதும், கடல் எல்லையை மறுவரையறை செய்வதும் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நீடித்த தீர்வை வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
”புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாபட்டினம் பகுதியிலிருந்து கடந்த 8-ம் தேதி விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. இவ்வாறு இலங்கை அரசு தொடர்ந்து மீனவர்களை சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும், எல்லைத் தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அதிகப்படியான அபராதம் விதிக்கும் வகையில் இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய சட்டத் திருத்தம் செய்யப்பட்டிருப்பதும், பாக்ஜலசந்தியில் பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மேற்கொண்டு வரும் மீன் பிடி தொழிலை அழிக்கும் விதமாக உள்ளது. மேலும் அத்தகைய நடவடிக்கைகள், தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்படும் படகுகளை, அவர்களிடம் திருப்பித் தராமல், நீண்ட காலம் இலங்கை அரசு வைத்திருப்பதால், அவை சீரமைக்க முடியாத அளவுக்கு சேதமடைந்துவிடுவதால், தமிழக மீனவர்கள் ஏற்கெனவே விரக்தியடைந்துள்ளனர்.
பாக்ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்க வரும் படகுகளை திசை மாற்றி விடுவதற்காக மத்திய அரசு ரூ.200 கோடியை விடுவித்துள்ளது. தமிழக அரசும் பாக்ஜலசந்தியில் இருந்து மன்னார் வளைகுடாவுக்கு திசை மாற்ற மூக்கையூர் பகுதியில் புதிய மீன்பிடி துறைமுகத்தை கட்டி வருகிறது.
இந்திய அரசு மட்டுமல்லாது, தமிழக அரசும் பாக்ஜலசந்தியில் நிலவும் இரு நாட்டு மீனவர் பிரச்சினையை இணக்கமான முறையில் தீர்வுகான நடவடிக்கை எடுத்து வரும் இந்த சூழலில், இலங்கை அரசின் செயல்பாடுகள் ஏமாற்றத்தை அளிப்பதுடன், தன்னை பெரியவன் என காட்டுக்கொள்ளும் விதமாகவும் உள்ளது.
எனவே, கச்சத்தீவை மீட்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை இந்திய அரசு செயல்படுத்துவது மற்றும் கடல் எல்லையை மறுவரையறை செய்வது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினையில் நீடித்த தீர்வை வழங்கும்.
மேலும் இலங்கை அரசு வசம் ஏற்கெனவே உள்ள 53 விசைப் படகுகள், 144 மீனவர்கள், மற்றும் தற்போது சிறை பிடிக்கப்பட்டுள்ள 3 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை மீட்கும் விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, உரிய தீர்வு காணவேண்டும்” என்று முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.