காங்கோ நாட்டில் 19 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் அதிரடியாக மீட்டனர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசில் இந்தியாவைச் சேர்ந்த ஹெர்ம்னாய் ரிதேஷ் என்பவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். கடந்த 19 நாட்களுக்கு முன்னர் ரிதேஷ் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 4 பேரை மர்மகும்பல் ஒன்று கடத்தியது. 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்தால் நால்வரையும் விடுவிப்பதாக கடத்தல் கும்பல் நிபந்தனை விதித்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இனைந்து கின்ஷாசாவில் பதுங்கியிருந்த கடத்தல் கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர். கடத்தப்பட்ட நால்வரையும் மீட்ட பாதுகாப்பு படையினர் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். மேலும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தேடி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட இந்தியர் மீட்கப்பட்டுள்ளதற்கு காங்கோவில் உள்ள இந்திய தூதரகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.