பாரீஸ் நகரில் வரலாறு காணாத மழை – ஒரு மாத மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது

447 0

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒரே நாளில் மட்டும் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால், 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் திடீரென புயல் தாக்கியது. சுமார் இரண்டு மணி நேரம் வெளுத்த மழை 54 மில்லி மீட்டர் அளவுக்கு பதிவாகியுள்ளது. இது ஒரு மாதத்தில் பெய்யும் சராசரி மழையின் அளவாகும். இதன் காரணமாக அந்நகரில் உள்ள 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நகரின் முக்கிய சாலைகள் வெள்ளத்தால் மிதக்கின்றன.

கடந்த 1995-ம் ஆண்டு 47.4 மி.மீ அளவுக்கு மழை பெய்ததே அதிகபட்சமாக இருந்தது. பாரீசின் புறநகர் பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த புயலால் பெரிதான அளவுக்கு சேதம் எதும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்சின் அண்டை நாடான சுவிட்சர்லாந்திலும் இந்த புயலின் தாக்கத்தால் பல இடங்களில் கனமழை பொழிந்தது. இதனால், அங்கு மீட்புப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment