இந்தியா உடனான எல்லைப்பிரச்சனை இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம் மற்றும் கலாச்சார உறவுகளை பாதிக்காது என சீன வெளியுறவு உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
சிக்கிம் மாநிலத்தில் இந்தியா – சீனா எல்லப்பகுதியில் உள்ள டோக்லாம் பகுதியை ஒட்டி சீனா சாலைப் பணிகளை மேற்கொண்டது. இதனையடுத்து, இந்திய ராணுவம் அங்கு படைகளை அதிரடியாக குவித்தது. இதற்கு பதிலடியாக டோக்லாம் பகுதி தங்களுக்கு சொந்தமானது என கூறிய சீனா தங்களது ராணுவத்தினரையும் எல்லையில் குவித்தது.
இரு நாடுகளின் இந்த ராணுவ நடவடிக்கைகள் எல்லையில் போர்ப்பதற்றத்தை உண்டாக்கியது. அது மட்டுமல்லாமல் இரு நாடுகளின் உயர்மட்ட தலைவர்களின் கருத்து மோதல்கள் பதற்றத்தை மேலும் வலுவாக்கின. இதற்கிடையே, ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து கைகுலுக்கி பேசினர்.
இதனால், போர்பதற்றம் சற்று தணிந்தது. இந்நிலையில், இந்தியாவுடனான எல்லைப்பிரச்சனை இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் கலாச்சார உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என சீன வெளியுறவு உயர் அதிகாரி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
”எல்லைப்பிரச்சனை தற்காலிகமான ஒன்றுதான், ஆயிரம் ஆண்டுகளாக இந்தியா – சீனா இடையே வர்த்தகம், பண்பாட்டு அளவிலான உறவுகள் உள்ளது. தொலைக்காட்சிகள் இந்த விஷயத்தை பரபரப்பாக விவாதிக்கின்றன. அதை கண்டு கொள்ள தேவையில்லை. இந்திய அரசு என்ன நிலைப்பாடு கொண்டுள்ளதோ, அதனைக் கொண்டுதான் சீனா உறவை தொடர்கிறது” என அந்த அதிகாரி கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.