பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கசாயம் ஆகியவற்றை இலவசமாக வழங்கி டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் இருவகையான காய்ச்சல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் சுகாதாரக்கேடு உள்ளிட்ட காரணங்களால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மற்றொருபுறம் கேரளத்தில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ள எலிக்காய்ச்சலும் இந்த மாவட்டங்களில் பரவத் தொடங்கியுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் காவேரிப்பட்டி என்ற இடத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் இரு குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளன. தர்மபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட அத்திமுட்லு, கல்லகரம், அகரம், பன்னிஅள்ளி, வேலங்காடு பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இந்தியா விடுதலை அடைந்து 69 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை சூழலை அளிக்க தமிழக ஆட்சியாளர்கள் தவறி விட்டனர் என்பதையே டெங்கு உயிரிழப்புகள் காட்டுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் அதிகம் பேர் உயிரிழந்ததைப் போன்று இந்த ஆண்டும் நடக்காமல் தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து வட்ட அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு சிகிச்சைக்கான வசதிகளை ஏற்படுத்துதல், டெங்கு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துதல், காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துதல், பப்பாளி இலைச்சாறு, நில வேம்பு கசாயம் ஆகியவற்றை இலவசமாக வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் டெங்கு காய்ச்சலை தமிழக அரசு தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.