தமிழகத்தில் மின்சாரத்தை சேமிக்கும் திட்டங்களுக்காக ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு: பியூஷ் கோயல்

496 0

தமிழகத்தில் மின்சாரத்தை சேமிக்கும் திட்டங்களுக்காக 3 ஆண்டுகளில் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கப்படும் எரிசக்தி மற்றும் சுரங்கங்கள் துறையின் மத்திய மந்திரி பியூஷ் கோயல் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மின்சார வாரிய தலைவர் சாய்குமார் மற்றும் எரிசக்திதுறை முதன்மை செயலாளர் விக்ரம் கபூர் ஆகியோரை சந்தித்து, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவாதித்தார்.

அப்போது, மத்திய அரசின் பங்களிப்போடு தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அதன் நிலவரம் குறித்து அதிகாரிகள் விவரமாக எடுத்து கூறினர். இதேபோல மின்சார தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும், அதிகாரிகள் எடுத்து கூறினர்.

பியூஷ் கோயல், தங்கமணி மற்றும் அதிகாரிகள் இடையேயான, இந்த சந்திப்பு பிற்பகல் 1 மணிக்கு தொடங்கி, 3 மணி வரையிலும் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு பின்னர் மத்திய மந்திரி பியூஷ் கோயல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

உதய் திட்டம் குறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் பேசினேன். தற்போது இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக இருக்கிறது. உதய் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், மின்சார துறைக்கு ஏற்படும் நஷ்டம் கணிசமாக குறைந்துள்ளது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பின்னர் நிலக்கரியின் விலை குறைந்துள்ளது. இந்த வரி விதிப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ரூ.508 கோடி சேமிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் மின் பற்றாக்குறை மாநிலத்தில் இருந்து, மின் மிகை மாநிலமாக மாறியிருக்கிறது. பிற மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை தமிழகம் விற்பனை செய்கிறது. மின்சார பகிர்மான திறன் 2 மடங்கு அதிகரிக்கப்படும். இதனால் தமிழகம் அதிக பயனை பெறமுடியும். விவசாயிகளுக்கு சூரிய ஒளி பம்புகள் அமைத்து கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு மின்சக்தி சார்ந்த திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படும்.

மின்சாரத்துறையில் கடந்த 2013-14-ம் ஆண்டில் ரூ.13,985 கோடியாக இருந்த நஷ்டம், நடப்பாண்டு ரூ.3,783 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்சாரத்தை சேமிக்கும் திட்டங்களுக்காக எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனத்தின் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும். செய்யூர் அனல் மின் நிலையத்துக்கு உள்நாட்டு நிலக்கரி உபயோகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக தனி நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்படும்.

இதனால் நிலக்கரி வெளிநாட்டில் வாங்கவேண்டிய அவசியம் இருக்காது. மேலும் நிலக்கரியின் விலையும் குறையும். தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. குறைவான விலையில் அனைவருக்கும் மின்சாரம் கிடைக்கவேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கம். இதற்காக பல்வேறு வகையான திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் அடுத்த நிதி ஆண்டில் ரூ.2 ஆயிரம் கோடி லாபம் ஈட்டுவோம் என்று கூறியிருந்தது. ஆனால் நாங்கள் செயல்படுத்தும் திட்டங்களின் மூலம் நடப்பாண்டிலேயே ரூ.2 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கும். அடுத்த ஆண்டில் ரூ.5 முதல் ரூ.6 ஆயிரம் கோடி வரை லாபம் கிடைக்கும். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3-வது மற்றும் 4-வது அலகில் இருந்து உற்பத்தி செய்யப்பட உள்ள 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது நியாயமான கோரிக்கை தான். இதுதொடர்பாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அணுமின் நிலையங்களை அனுமதிக்காத மாநிலங்களுக்கு, அணுமின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வழங்கப்படாது. மின்சார கட்டணத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை. அதே சமயத்தில் தற்போதைய நிலவரப்படி மின்சார கட்டணம் குறையவும் வாய்ப்பு இல்லை.

எண்ணூர் துறைமுகத்தை தனியார்மயமாக்குவதாக செய்திகள் வந்தன. எந்தவொரு துறைமுகத்தையும் தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை. மரபுசாரா எரிசக்தித் துறைக்கு தமிழகம் நல்ல ஆதரவை அளிக்கிறது. இதுதொடர்பாக தமிழகத்தில் இருந்து வரும் எந்தத் திட்டத்தையும், கோரிக்கையையும் ஏற்று அனுமதி அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

தென் மாநிலங்கள் பயன்பெறும் வகையில், மின்வழித் தடப்பாதையின் திறனை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளோம். மேலும், அடுத்த 3 அல்லது நான்கு ஆண்டுகளில் மின்பகிர்மானத்துக்கான திறனை 300 மடங்கு அதிகரிப்போம்.

2014-ம் ஆண்டு தென்மாநிலங்களில் மின் பகிர்மான அளவு 3 ஆயிரத்து 450 ஆக இருந்தது. இந்த மின் பகிர்மான அளவை 2020-ம் ஆண்டுக்குள் 18 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்த இருக்கிறோம். இதன்மூலம், தமிழகத்துக்கு மின்சாரம் அளிப்பதிலோ அல்லது தமிழகத்தில் இருந்து மின்சாரம் கொண்டு செல்வதிலோ எந்தப் பிரச்சினையும் இருக்காது.

செய்யூர் மின் திட்டம், மண்டல அளவிலான மின்வழித் தடம் ஆய்வு, என்.எல்.சி.யில் பழைய ஆலையை 2018-ம் ஆண்டு ஜூன் வரை செயல்படுத்த அனுமதிப்பது போன்ற சில கோரிக்கைகளை தமிழக அரசு வைத்துள்ளது. அவை பரிசீலிக்கப்படும். கூடங்குளம் 3 மற்றும் நான்காவது அலகில் இருந்து முழுமையான மின்சாரத்தை தமிழகத்துக்கே வழங்கிட முயற்சிகளை மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment