சட்டத் திருத்தத்தை திரும்ப பெறும்வரை போராடுவோம்

340 0

201608070728155176_Advocates-Committee-announced-Will-fight-until-the-return-of_SECVPFவக்கீல்களுக்கான சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி, தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் ஜூன் மாதம் 28-ந் தேதியில் இருந்தும், மதுரை ஐகோர்ட்டு கிளை வக்கீல்கள் ஜூன் மாதம் 29-ந் தேதியில் இருந்தும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பின் போராட்டக்குழு செயற்குழு கூட்டம் மதுரை ஒத்தக்கடையில் உள்ள எஸ்.எஸ்.மகாலில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட வக்கீல்கள் சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வக்கீல்களுக்கான சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறும்வரை வேலைநிறுத்தம் தொடரும். எங்கள் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு முயற்சிகளை நீதிபதிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாக நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஆஜராகாத பட்சத்தில் தொடர்ந்து வாய்தா வழங்கக்கூடாது என்றும், வக்கீல்கள் இல்லாமல் வழக்கு தொடர்ந்தவர்கள் மூலம் வழக்கை நடத்தலாம் என்றும் ஐகோர்ட்டு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இந்த சுற்றறிக்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அதை நிராகரிக்கிறோம். எங்களது போராட்டத்தை ஒடுக்க முடியாது. தமிழக வக்கீல்கள் போராட்டம் அகில இந்திய அளவில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் சுப்ரீம் கோர்ட்டு முன்பு போராட்டம் நடத்த உள்ளோம்.

இந்த போராட்டத்தில் 50 ஆயிரம் வக்கீல்கள் கலந்து கொள்ள உள்ளனர். வக்கீல்கள் போராட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்றும், நீதிமன்றங்கள் சுமுகமாக செயல்படுவதாகவும் மத்திய சட்டத்துறை மந்திரி, தமிழக சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் கூறி இருப்பது சரியானது அல்ல. அதேபோன்று தமிழகத்தில் நீதிமன்றங்கள் சுமுகமாக செயல்படுவதாக சுப்ரீம் கோர்ட்டுக்கு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் போராட்டங்களை பல்வேறு வழிகளில் எடுத்துச்செல்ல முடிவு செய்துள்ளோம். அதன்படி, வருகிற 9, 10-ந் தேதிகளில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் முன்பும், சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளை முன்பும் உண்ணாவிரதம் நடைபெறும். 11, 12 ஆகிய தேதிகளில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் முன்பும், சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளை முன்பும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும்.

15-ந் தேதி சுதந்திர தினத்தன்று ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றம் முன்பும் அம்பேத்கர், காந்தி ஆகியோரின் உருவப்படத்தை வைத்து ‘நீங்கள் பெற்றுக் கொடுத்த சுதந்திரம் தமிழகத்தில் இல்லை’ என்பதை உணர்த்தும் வகையில் வாயில் கருப்புத் துணி கட்டி மனு கொடுக்கும் போராட்டம் நடத்த உள்ளோம்.

வருகிற 16, 17, 18, 19 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வக்கீல்களை சென்னைக்கு வரவழைத்து சென்னை கிரீன்வேஸ் சாலை, கடற்கரை சாலை போன்ற முக்கிய சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

சட்டத்திருத்தத்தை மறு பரிசீலனை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஐகோர்ட்டு நீதிபதிகள் குழு முன்பு 19-ந் தேதி அனைத்து மாவட்ட வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் ஆஜராகி தங்களுக்காக தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பின் கூட்டு நடவடிக்கைக்குழு நிர்வாகிகள் ஆஜராவார்கள் என்று அங்கீகாரம் அளிக்க உள்ளனர். நீதிமன்றங்களை மூடி விட நீதிபதிகள் முடிவு செய்தால் நாங்களும் அதற்கு தயாராக உள்ளோம்.இவ்வாறு திருமலைராஜன் கூறினார்.