கவிழ்ந்த கப்பல் போன்ற கட்டிடத்தில் அரசு மருத்துவமனை மட்டும் இயங்கலாமா?

331 0

201608070756338499_DMK-leader-karunanidhi-question-and-answer-report_SECVPFகவிழ்ந்த கப்பல் போன்ற கட்டிடத்தில் அரசு மருத்துவமனை மட்டும் இயங்கலாமா? என கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி, பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- தமிழகத்தில் குற்றங்களைத் தடுக்க அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஐகோர்ட்டு, தமிழக அரசிடம் விவரம் கேட்டிருக்கிறதாமே?

பதில்:- ரெயில் நிலையத்தில் பட்டப்பகலில் சுவாதி கொலை செய்யப்பட்டது பற்றி, மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறைபாடுகள் குறித்தும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகளிடம் பத்து கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரனே, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தையே வழக்கு மனுவாகப் பதிவு செய்து, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலும், நீதிபதி மகாதேவனும் விசாரித்து, இந்த பத்து கேள்விகளுக்கு மத்திய – மாநில அரசுகள் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள்.

இந்த வழக்கு நேற்று(நேற்று முன்தினம்) ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர்கள் பதிலளிக்க அவகாசம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு நீதிபதிகள், “ஏற்கனவே கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இருந்தாலும் மேலும் அவகாசம் கேட்கிறீர்கள். இன்னும் ஆறு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதற்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதத்துடன் பதிலளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

கேள்வி:- அதிக அளவில் வருவாய் தரக்கூடிய உணவுப் பொருட்களான பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளுக்கு, வரி வாங்காமல், அதானி மற்றும் ராம்தேவ் போன்ற பெரும் நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதிக்க மத்திய அரசே உதவி செய்கிறது என்ற குற்றச்சாட்டு பற்றி?

பதில்:- மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர் என்று அழைக்கப்படுகின்ற அதானி நடத்தும் “அதானி புட் புராடெக்ட்ஸ்” நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் அரசு எண்ணெய் நிறுவனப் பங்குகளைவிட அதிகம் உயர்ந்துள்ளது. ராம்தேவின் பதஞ்சலி நிறுவனமும் பருப்பு மற்றும் எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.

அண்மையில் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்த மோடி தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து சென்றிருக்கிறார். அங்கே சோயா எண்ணெய் மற்றும் பாமாயில் போன்றவற்றின் இறக்குமதி குறித்து பேசப்பட்டுள்ளது.

இந்த நிலையிலே, தனியார் நிறுவனங்களின் அதிக லாபத்திற்கு உதவி செய்திடும் வகையில், பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட முக்கியப் பொருட்கள் மீதான உள்ளூர் வரியை நீக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு யோசனை கூறியிருப்பதாகத் தெரிகிறது.

கேள்வி:- கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த வந்திதா பாண்டே மாற்றம் செய்யப்பட்டுள்ளாரே?

பதில்:- அமைச்சர்களுக்கு மிகவும் நெருங்கிய அன்புநாதன் வீடு, குடோன் ஆகியவை சோதனைக்கு உள்ளான போது, கரூர் மாவட்டத்தில் காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய வந்திதா பாண்டேவை கொலை செய்யக்கூட முயற்சி நடைபெற்றதாக ஏடுகளில் அப்போதே செய்தி வந்தது.

அன்பு நாதன் வழக்கை திசை திருப்ப ஒரு சிலர் முயன்ற போது, அதற்கு கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை; நேர்மை உணர்வோடு, சட்டப்படி நடந்து கொண்டார். அதற்காக அ.தி.மு.க. ஆட்சி நிர்ணயித்துள்ள விலையைத்தான் இப்போது கொடுத்துள்ளனர். காவல் துறை அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டுள்ளார்கள். ஆனால் கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் மட்டும் சென்னையிலே உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கேள்வி:- குஜராத் மாநிலத்தில் பொருளாதார அடிப்படையில் செய்யப்பட்டிருந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளதே?

பதில்:- மேல் சாதியில் உள்ள வசதியற்றவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டினை, கல்வியிலும், உத்தியோகங்களிலும் வழங்க வேண்டும் என்று குஜராத்தில் ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த அவசரச் சட்டம் செல்லாது என்றும், அரசியல் சட்ட விரோதம் என்றும் குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையிலான முதல் அமர்வு தீர்ப்பு கூறியிருப்பது நம்மைப் போன்ற சமூக நீதி ஆர்வலர்கள் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

கேள்வி:- வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டசபையைத் தூக்கி எறிந்துவிட்டு, கவிழ்ந்த கப்பல் போன்ற ஒரு கட்டிடத்தைக் கட்டி அங்கே தி.மு.க. போக முயற்சித்ததாக, சட்ட சபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?

பதில்:- தி.மு.க. ஆட்சியில் புதிய சட்டசபை கட்டப்பட்டு, சோனியாகாந்தியும், மன்மோகன்சிங்கும், நானும் கலந்துகொண்டு திறப்பு விழா நடைபெற்றதே, அந்த கட்டிடத்தை கவிழ்ந்த கப்பல் போன்ற கட்டிடம் என்கிறார் ஜெயலலிதா. தற்போது அதே கட்டிடத்தில் மருத்துவமனையை ஜெயலலிதா அமைத்திருக்கிறாரே; அதுமட்டும் அங்கே இருக்கலாமா?. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.