தென்பகுதியை விட வட பகுதியில் தரமான ரெயில் சேவை அளிக்கப்படுகிறது என்ற புகார் குறித்து கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி பதில் அளித்தார்.
டெல்லி மேல்-சபையில் ரெயில்வே துறை சம்பந்தமாக தி.மு.க. எம்.பி. கனிமொழி எழுத்துப்பூர்வமாகவும், நேரடியாகவும் சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கனிமொழி.:- ரெயில்வேயில் வழக்கமான ரெயில் பெட்டிகளுக்கு பதிலாக, இலகுரக எல்.ஹெச்.பி. எனப்படும் நவீன ரெயில் பெட்டிகளை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளதா? அப்படி முடிவு செய்யப்பட்டிருக்கிறது எனில் ஒவ்வொரு ரெயில்வே மண்டலங்களுக்கும் எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது? இந்திய ரெயில்வே துறையின் ஒவ்வொரு மண்டலத்துக்கும் எத்தனை எல்.ஹெச்.பி. ரெயில்பெட்டிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன? இந்தியாவிலேயே அதிக பட்சமாக 6 ஆயிரத்து 500 பழைய ரெயில் பெட்டிகளை கொண்டிருக்கும் தெற்கு ரெயில்வேக்கு இதுவரை எத்தனை இலகுரக நவீன பெட்டிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன?
ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு:- இந்திய ரெயில்வேயில் உத்தேசமாக 53 ஆயிரம் பயணிகள் பெட்டிகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சுமார் 3 ஆயிரத்து 800 ரெயில்பெட்டிகள் எல்.ஹெச்.பி. வகையிலானவை. மீதமுள்ள சுமார் 49 ஆயிரத்து 200 பெட்டிகள் பழைய முறையில் வடிவமைக்கப்பட்டவையே.
இந்த ஆண்டில் சுமார் ஆயிரத்து 600 எல்.ஹெச்.பி. பெட்டிகள் புதிதாக பயன்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.இத்தகைய ரெயில்பெட்டிகள் டெல்லிக்கும் வாரணாசிக்கும் இடையே ஓடும் மகாமனா எக்ஸ்பிரஸ் ரெயிலில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய ரெயில்வேயின் அனைத்து ரெயில்வே மண்டலங்களிலும் இதுவரை 3 ஆயிரத்து 800 எல்.ஹெச்.பி. வகை பெட்டிகள் பயன்பாட்டில் இருக்கின்றன.
தெற்கு ரெயில்வேயில் 16 ஜோடி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 321 பெட்டிகள் எல்.ஹெச்.பி. வகையைச் சார்ந்தவை. இவற்றில் 6 ஜோடி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 112 பெட்டிகள் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்வே பட்ஜெட்டில் தெற்கு ரெயில்வேக்கு 101 எல்.ஹெச்.பி. வகையிலான பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கனிமொழி:- கடந்த ஜூலை 26-ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய கணக்குத் தணிக்கை குழு அறிக்கையில், தயாரிக்கப்பட்ட ரெயில் பெட்டிகளை பயன்படுத்தாமை, தாமதமாக பயன்படுத்துதல் ஆகிய காரணங்களால் ரெயில் பெட்டிகள் உற்பத்தியில் ஒரு தேக்க நிலை நிலவுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை தவிர்க்கப்படுமா?
சுரேஷ் பிரபு:- தற்போது 53 ஆயிரம் ரெயில்பெட்டிகள் இருப்புப்பாதைகளில் இயங்கி வருகின்றன. அவற்றின் தரத்தை மேம்படுத்தி ரெயில் பயணிகளின் பயணத்தை மேம்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகளை மேம்படுத்தி வருகிறோம்.
கனிமொழி:- சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் இலகுரக ரெயில்பெட்டிகள் தயாரிக்கப்படுகிறதா? அதுபற்றிய விவரங்கள் தேவை. மேலும் பொதுவாகவே தென்பகுதியை விட நாட்டின் வடபகுதிக்கு தரமான ரெயில் சேவை அளிக்கப்படுவதாக ஒரு புகார் இருக்கிறது. இதற்கு மந்திரியின் விளக்கம் என்ன?
சுரேஷ் பிரபு:- சென்னையில் இருக்கும் ஐ.சி.எப். தொழிற்சாலை இந்திய ரெயில்வே தொழிற்சாலைகளிலேயே சிறந்தது. ஐ.சி.எப். ஆலையை மேம்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
நான் ஏற்கனவே குறிப்பிட்ட தீனதயாள் ரெயில்பெட்டிகள் ஐ.சி.எப்.பில் தான் தயாரிக்கப்படுகின்றன. மேலும், கனிமொழி எம்.பி. குறிப்பிட்ட மாதிரி நாட்டின் ஒரு பாகத்துக்கு தரமான சேவை, இன்னொரு பாகத்துக்கு தரமற்ற சேவை என்ற பாரபட்சமெல்லாம் இல்லை. ரெயில்வே ஒரு தாயைப்போல நாட்டின் அனைத்து பிள்ளைகளையும் சமமாகவே நடத்துகிறது.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.