மூன்று நிபந்தனைகளுக்கு உடன்பட்டால் மாத்திரமே அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை உருவாக்கமுடியும் என மூன்று மகா சங்கங்கள் அரசாங்கத்துக்கு பணித்துள்ளன.
ஒற்றையாட்சிமுறை நீக்கப்படக்கூடாது, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும், மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கக்கூடாது ஆகிய மூன்று நிபந்தனைகளுக்கும் உடன்பட்டால் புதிய அரசியலமைப்பை உருவாக்கமுடியும் எனத்தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அஸ்கிரிய பீடத்தின் முதன்மைச் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் கருத்துத் தெரிவிக்கையில்,
புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தால் நாம் மகிந்தவுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக குற்றம் சுமத்துகின்றனர். மகிந்தவை இனி யாரும் அதிகாரத்துக்குக் கொண்டுவரமுடியாது என்ற விடயம் அனைவரும் அறிந்ததே.
நாங்கள் அரசியல் வாதிகள் அல்ல. ஆனால் நாட்டின் அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்படும்போது ஆட்சியாளர்கள் எம்மிடம் வரவேண்டும். நாம் எமது நிலைப்பாட்டைக் கூறுவோம். அதற்காக நாம் ஒருபக்கச் சார்பானவர்கள் எனக் கூறுவது தவறு.
உருவாக்கப்படவிருப்பது புதிய அரசமைப்பா அல்லது அரசமைப்புத் திருத்தமா என்று எமக்குத் தெளிவில்லை. புதிய அரசமைப்பை உருவாக்குவதாக இருந்தால் நாம் முன்வைக்கும் விடயங்கள் அதில் உள்வாங்கப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.