ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் மேலும் ஒரு வாலிபர் அதிகாரிகள் பிடியில் சிக்கி உள்ளார்.
சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகம் முழுவதும் தங்களை விரிவுபடுத்திக் கொள்ள திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள்.பணய கைதிகளாக பிடித்து வைத்திருப்பவர்களை கொடூரமாக கொலை செய்து அந்த வீடியோ காட்சிகளை வெளியிடுவதை இந்த தீவிரவாதிகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.
தங்களது இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக ஐ.எஸ். தீவிரவாதிகள் பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்கள் மூலமாக ஆள் பிடிக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் சிலர் வெளிப்படையாகவே தங்களது தீவிரவாத உணர்வை வெளிப்படுத்தினர்.
தாம்பரத்தில் அறை எடுத்து தங்கி ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருந்த கல்லூரி மாணவர்கள் சிலர் பிடிபட்டனர். ஐ.எஸ்.ஐ.எஸ். முத்திரை பதித்த பனியன்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட இளைஞர்கள் சிலரும் சிக்கினர்.
இதனைத் தொடர்ந்து ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்களை தீவிரமாக கண்காணிக்கும் பணியில் மத்திய உளவு பிரிவினரும், தீவிரவாத தடுப்பு பிரிவினரும் தீவிரம் காட்டினர். இதன் பின்னர் தமிழகத்தில் ஐ.எஸ். ஆதரவாளர்களின் நடமாட்டம் குறைந்தது போல காணப்பட்டது.
ஆனால் சத்தமில்லாமல் சென்னையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஐ.எஸ். ஆதரவாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது இப்போது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ஐ.எஸ். ஆதரவாளர்கள் மீண்டும் தலைதூக்கி இருப்பதும் அம்பலமாகி இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜமீல் அகமது என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அம்மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிக்கிய இவர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டது தெரிய வந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த வாலிபர்கள் சிலருடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டது.
அப்போது மயிலாப்பூரை சேர்ந்த முகமது இக்பால் என்ற வாலிபர் ஜமீல் முகம்மதுவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இவர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு சென்னையில் இருந்து நிதி திரட்டி கொடுத்துள்ளார்.
மயிலாப்பூர் இக்பால் மூலமாக ரூ.65 ஆயிரம் ஐ.எஸ். இயக்கத்துக்கு கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இவர் ராஜஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் உள்ள சென்னை வாலிபர்களை பிடிக்க ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தொடர் வேட்டையில் இறங்கினர். இது தொடர்பாக அவர்கள் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில் சென்னை கொண்டித் தோப்பை சேர்ந்த ஆரூண் ரஷீத் என்பவரும் ஐ.எஸ். இயக்கத்துக்கு நிதிதிரட்டி கொடுக்கும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த 3-ந்தேதி இவர் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் போலீசார் சென்னை வந்து ஆரூண் ரஷீத்தை பிடித்துச் சென்றனர். பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்த ஆரூண் ரஷீத் ரூ.5 லட்சம் நிதிதிரட்டி கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதிதிரட்டுவதாக கூறி ஆரூண் ரஷீத் பண வசூலில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த நிலையில்தான் கடலூர் பரங்கிப்பேட்டையை சேர்ந்த அகமது என்பவர் சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் பிடிபட்டார். ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது உறுதியான பின்னரே அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஐ.எஸ். இயக்கத்துக்கு நிதி கொடுத்ததாக கூறப்படும் சென்னை மண்ணடியை சேர்ந்த ராஜா முகம்மது, சிக்கந்தர், வண்ணாரப்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த ரியாசுதீன் ஆகியோருக்கு ராஜஸ்தான் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இவர்கள் இன்று ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சென்னையில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ். ஆதரவாளர்களை கூண்டோடு களையெடுக்க ராஜஸ்தான் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் யார்-யார் என்கிற விவரங்களையும் ராஜஸ்தான் போலீஸ் படை சேகரித்து வைத்துள்ளது. ஐ.எஸ். இயக்கத்துடனான இவர்களின் தொடர்பு பற்றி முழுமையாக விசாரணை நடத்திய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதன்படி 11 பேரும் மத்திய மற்றும் மாநில உளவு பிரிவு போலீசாரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். விசாரணை முடிவில் 11 பேரும் கைது செய்யப்பட உள்ளனர். இதன் மூலம் ராஜஸ்தான் போலீசின் வேட்டை சில நாட்களில் மேலும் தீவிரமாகும் என்று தெரிகிறது.தடை செய்யப்பட்ட இயக்கமான ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு சென்னையில் இருந்து இளைஞர்கள் சிலர் பண உதவி செய்திருப்பது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து ஐ.எஸ். ஆதரவாளர்களை தமிழக போலீசாரும் கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.