ரஷ்யாவோடு இணைந்து பாதுகாப்பு திட்டமா?

309 0

ரஷ்யாவோடு இணைந்து சைபர் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் டிரம்ப் முடிவுக்கு அவரது சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் முதன் முதலாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு நாடுகளும் சேர்ந்து இணையதள குற்றங்களை தடுக்க சைபர் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவது தொடர்பாக இருவரும் பேசினர்.

தேர்தல் முறைகேடு மற்றும் பல்வேறு விதமான குற்றங்களை தடுப்பதற்காக சைபர் பாதுகாப்பு அமைப்பு உருவாக்குவது குறித்து புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக டிரம்ப், ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், டிரம்ப்பின் இந்த முடிவுக்கு அவரது சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம்,” இது சரியான யோசனை அல்ல. ரஷ்யா நம்மோடு நெருங்கி வருவது சரியல்ல” எனக் கூறியுள்ளார். குடியரசுக்கட்சியின் சார்பில் டிரம்ப் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டதற்கு, லிண்ட்சே கிரஹாம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் ஆடம் ஸ்கிப், “ இது தான் முடிவாக இருக்கும் என்றால் அமெரிக்க தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளை நேரடியாக மாஸ்கோவுக்கு அனுப்பி விடலாம்” என காரசாரமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவுத் துறையின் உதவியோடு தான் டிரம்ப் வெற்றி பெற்றார் என எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கூறி வந்த நிலையில், டிரம்ப் அரசின் இந்த முடிவு அந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

Leave a comment