யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு 6ஆம் கட்டைப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி, இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள 6ஆம் கட்டை பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த 19 வயதுடைய தினேஸ் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின்போது, சட்டவிரோதமாக மணலை ஏற்றிக்கொண்டு கண்டர் ரக வாகனத்தில் வந்த குறித்த இளைஞனை பொலிஸார் மறித்த போதிலும், இளைஞன் வாகனத்தை வேகமாகச் செலுத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து பொலிஸார் குறித்த இளைஞனை நோக்கி துப்பாக்கிச் சூடு நடாத்தியதில், குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்யைடுத்து பொலிஸாரின் வாகனத்திற்கு அப்பகுதி மக்கள் கல்வீசித் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உயிரிழந்துள்ள இளைஞனின் சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை அப்பகுதியில் பதற்றம் நிலவி வந்த போதிலும் தற்போது நிலமை சுமுகமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், உயிரிழந்த இளைஞனைச் சுட்டதாகக் கூறப்படும் பொலிஸ் பரிசோதகரின் கரவெட்டியில் அமைந்துள்ள வீடு உயிரிழந்தவரின் உறவினர்களால் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த வீட்டிற்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், மந்திகை வைத்தியசாலையிலும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.