அரச மரத்தின் கீழ் அரசியல் அமைப்பு!

11188 0

“ஜெயவர்த்தனா ஒரு உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது” ன தேசியத் தலைவர் பிரபாகரன்  1980 ஆம்  ஆண்டு  ஓர் இந்திய ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் கூறியிருந்தார்.

இன்று 2017 ஆகி விட்டது எந்த சிங்கள பௌத்தனும் உண்மையான பெளத்தனாக மாறிவிடவில்லை. அதனால் இன்று வரை  தமிழ் இனம்  நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

சிங்களவர்களை உண்மையான பௌத்தனாக மாறுவதற்கு பௌத்த மதபீடங்களின் மகாநாயக்க  தேரர்கள் தயாராக இல்லை. காவி உடைக்குள் அவர்கள் பேரினவாத அரசியலை நடத்துகிறார்கள்.

2015 ஜனாதிபதி தேர்தலின் போது புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் ஆணையைக்  கோரினார். இதற்கமைய 62 இலட்சம் மக்கள் இதற்கு ஆணை வழங்கியுள்ளனர்.

புதிய அரசியல் யாப்பு பற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படியான பேச்சுக்களைத்தான் சம்பந்தன், சுமந்திரன் போன்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு  பிரமுகர்கள் தொடர்ந்து பேசி வருகின்றார்கள்.

புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பு தொடர்பாக இதுவரை 5000க்கும் மேற்பட்ட மக்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள  குழுவின் தலைவர் வழக்கறிஞர் லால் விஜேநாயக்க  தெரிவித்திருந்தார்.

தற்போது   அரசியல் அமைப்பு உத்தேச வரைபு ஒன்றை தயாரிக்கும் இவ்வேளை  புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்புத் திருத்தம் தற்போது நாட்டுக்குத் தேவையில்லை என்று பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்கர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

இதையடுத்து புதிய அரசியலமைப்பு மாதிரி சட்ட மூலத்தை தயாரிப்பது குறித்து அது தொடர்பாக பௌத்த மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தி அவர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படும்  என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

இதே சமயம் மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு சந்திக்கவுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கையின் அரசியல் தலைவிதியை தீர்மானிப்பவர்களாக    காவிஉடை தரித்த  பௌத்தர்கள்  தான் உள்ளார்கள்.

அரசமரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டு காலம் தியானம் செய்து ஞானம் பெற்றார் புத்தர். ஆனால் 60 ஆண்டுகளுக்கு மேல் அரச மரத்தின் கீழ்  தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் குழி தோண்டி புதைக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும் இலங்கையின் அரசியல் அமைப்பு அரசமர நிழலில் தான் எழுதப்படும். அந்த எழுது கருவிகளுக்குள்   கதிர்காமர்களும்  நீலன் திருச்செல்வங்களும்  கருணாக்களும்  கலந்திருப்பார்கள்.   அதற்குரிய வரிகளும் வலிகளும்  தமிழர்களின் குருதியே! 

 

Leave a comment