இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக இராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர் ஜேசு தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும், இரு நாட்டு மீனவர்களையும் பாரம்பரிய இடத்தில் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் கண்டணம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் இன்று (09) முதலாவது நாளாக தொடங்கியுள்ளது.
மேலும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 800க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் 5000 க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் இன்றி காணப்படுகின்றனர். நாள் ஒன்றுக்கு 2கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து வரும் 14ம் திகதி மத்திய அரசு அலுவலகமான தபால்நிலையம் முன்பு தீக்குளித்து போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதனால் மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை படகுகளை விடுதலை செய்யவும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் அபராதம் விதிக்க உள்ள சட்டத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
மத்திய, மாநில அரசுகள் மீனவர்கள் பிரச்சனைக்களுக்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மிகபெரியளவில் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அறிவித்துள்ளனர்.