பாதிக்கப்பட்டுள்ள பெண் தலமைத்துவ குடும்பங்களிற்கும் உதவுவது தொடர்பில் தமிழ்நாடு கிளைத் தலைவர் தமிழிசை

269 0
வடக்கு , கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் பெண் தலமைத்துவ குடும்பங்களிற்கும் உதவுவது தொடர்பில் மத்திய மாகாண அரசுகளுடன் பேசுவேன் என இந்திய பாரதிய ஜனதா கட்சியின்  தமிழ்நாடு கிளைத் தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டிற்கு நேற்றைய தினம் வருகை தந்த தமிழிசை முதலமைச்சர் மற்றும் பேரவைத் தலைவர் ஆகியோரை தனித்தனியே சந்தித்திருந்தார். பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்களான சத்தியலிங்கம் , டெனீஸ்வரன் உள்ளிட்ட குழுவினருடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்புத் தொடர்பில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் விபரம் தெரிவிக்கையில் ,
வடக்கு , கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் பெண் தலமைத்துவ குடும்பங்களிற்கும் உதவுமாறும் , போருக்குப் பின்னரான அபிவிருத்திக்காகவும் அபிவிருத்தியுடனான காலத்தில் எமது மக்களிற்கான ஓர் நிரந்தரத் தீர்விற்கு  இந்திய மத்திய அரசு இறுக்கமான அழுத்தம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருந்தோம்.
இதேவேளை மிக முக்கியமான போரிக்கையாக தமிழக மீனவர் ஊடுருவலால் எமது மீனவர்கள் சந்திக்கும் பாதிப்புக்கள் தொடர்பிலும் எடுத்துக்கூறியதோடு இவற்றிற்கு நேரடியாக உதவக் கூடிய வழிவகைகளில் உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டோம். இவற்றினை செவி மடுத்தபின்பு குறித்த விடயங்களிற்குப் பதிலளித்திருந்தார்.
 அதன்போது வடக்கு , கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் பெண் தலமைத்துவ குடும்பங்களிற்கும் உதவுவது தொடர்பில் மத்திய மாகாண அரசுகளுடன் நிச்சயம்  பேசுவேன். அதேநேரம் இங்கு யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் விடயம் அதிக பேசு பொருளாக கானப்பட்டபோதும் தற்போது பெருதும் அரிகிவிட்டது. உண்மையில் இந்த மக்களிற்கு இப்போதுதான் பெரும் உதவிகளும் ஆறுதலும் தேவையான காலமாகவுள்ளது.
எனவே இவ்வாறான விடயங்களை தெரிவித்து அதற்கான ஏற்பாடுகளுடன் அடுத்த கட்டமாக ஓர் உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டு இங்கு பயணம் செய்து இவற்றிற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்வேன். என வாக்குறுதியளித்துள்ளார். என்றார்.

Leave a comment