40 வருடங்களின் பின் அம்பாள்குளம் வீதி புனரமைப்பு

438 0
கிளிநொச்சி மாவட்டத்தில் 40 வருடகாலமாக புனரமைக்கப்படாது காணப்பட்ட அம்பாள்குளம் கிராமத்திற்கான பிரதான வீதி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமக்கப்பட்டு மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிளிநொச்சியில் 40 வருட காலமாகப் புனரமைப்பு ஏதுமின்றிக் காணப்பட்ட அம்பாள்குளம் மனோன்மணி கோயில் வீதி புனரமைக்கப்பட்டு  (05.07.2017) மாலை 4.30 மணியளவில் மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வீதி கையளிக்கும் நிகழ்வு அம்பாள்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் த.சேதுபதி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சார்பாகக் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன் அவர்கள் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போது,
‘அம்பாள்குளம் கிராமத்து மக்களின் முக்கியமான தேவைகளில் ஒன்றாக இந்த வீதி காணப்படுகின்றது. இவ்வீதி நீண்ட காலமாகத் திருத்தியமைக்கப்படாது காணப்பட்டமையால் இக்கிராமத்து மக்கள் போக்கு வரத்துச் செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்துள்ளார்கள். இதனைக் கருத்திற்கொண்ட எமது பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்குக் கிடைத்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் இவ்வீதியையும் திருத்துவதற்குத் தெரிவுசெய்திருந்தார். அதன் பயனாகத்தான் இவ்வீதி புனரமைக்கப்பட்டு இன்றைய தினம் உங்களிடம் கையளிக்கப்படுகின்றது.
எமது மக்கள் பல்வேறுபட்ட குறைகளுக்குள் வாழ்கிறார்கள். இந்தக் குறைகள் அனைத்தையும் சவால்களாக எதிர்கொண்டு நிறைகளாக மாற்றி வெற்றிபெற வேண்டும்.
எமது பகுதிகள் அனைத்தும் அபிவிருத்தி செய்யப்பட்டு எமது மக்களும் நிறைவான வாழ்க்கையை வாழவேண்டும் அதற்காக எமது மக்களுக்கான எமது நேரிய பயணம் உங்கள் பலத்துடன் தொடரும்’ என்றார். இந்நிகழ்வில் மேற்படி வீதியைப் புனரமைத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர், உதவிப் பொறியியலாளர், அம்பாள்குளம் கிராமசேவையாளர், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், அம்பாள்குளம் பகுதிக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமைப்பாளர், கட்சியின் செயற்பாட்டாளர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment