உமா ஓய செயற்றிட்டத்தின் ஒரு பகுதி வேலைத்திட்டங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மீன்பிடித்துறை மற்றும் மகாவளி அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உமா ஓயவின் தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றிய கருத்துக்களை தௌிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு இன்று (07) இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், செயற்றிட்டம் தொடர்பில் உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பல தீர்மானங்கள் பற்றி கவனம் செலுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதன்போது பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், மற்றைய பகுதியின் பணிகள் அச்சுறுத்தலான நிலையில் இருப்பதால், தொடர்ந்து அதன் பணிகளையும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, அகழ்வு இடம்பெறும் தருணத்திலேயே பள்ளங்கள் மூடப்படும் வகையிலான இயந்திரம் இந்த மாதயிறுதியில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
அத்துடன் மாதயிறுதியில் நோர்வே நாட்டின் அதிகாரிகளும் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.